திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டில் உள்ள பழைய இரும்பு கடை குடோனில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் ஜனார்த்தனம் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இங்குள்ள குடோனில் ஏராளமான பழைய பொருட்கள், அட்டைகள், பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அடுக்கி வைத்திருந்தார். இங்கு சதீஷ் (30) மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த உமேஷ் (23) ஆகியோர் இரவு காவலாளியாக பணியில் இருந்தனர். நேற்று அதிகாலை திடீரென குடோனில் தீப்பிடித்தது. அட்டைகள் அனைத்தும் எளிதில் தீப்பிடிக்க கூடியது என்பதால் சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பியது.
குபுகுபுவென கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ், உமேஷ் ஆகியோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க போராடினர். தீ மளமளவென பரவியதால் சிறிது நேரத்தில் மின் வயர்கள் எரிந்து சேதமானது. இதனால் பூண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
