செங்கல்பட்டு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்வதற்குப் போக்குவரத்து காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் ஆந்திரா நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையில் நெரிசலை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, அவை மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தென் மாவட்டத்திலிருந்து சென்னை கோயம்பேடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள், ஒரகடம் மற்றும் பெரும்புதூர் மார்க்கமாக செல்வதற்குப் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மாலை நேரங்களில் பேருந்து போக்குவரத்து அதிகமாக இருப்பதால், குறிப்பிட்ட சில நேரங்களில் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறைக்காகச் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சொந்த ஊர் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகக் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து முனையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பேருந்து மற்றும் சிறிய ரக வாகனங்களின் தடையற்ற பயணத்தை உறுதி செய்யவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
