மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வரும் 6ம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளனர். ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் 3 மாதத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் 6ம் தேதி முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, முதல் டிவிஷன் பெஞ்ச்சில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் பொதுநல மனுக்கள், 2022ம் ஆண்டு முதலான ரிட் அப்பீல் மனுக்களை விசாரிக்கின்றனர். 2வது டிவிஷன் பெஞ்ச்சில் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆட்கொணர்வு மனுக்கள், அனைத்து கிரிமினல் அப்பீல் மனு, 2021ம் ஆண்டு வரை தாக்கலான ரிட் அப்பீல், 2020ம் ஆண்டு வரை தாக்கலான சிவில் அப்பீல் மனுக்களை விசாரிக்கின்றனர். 2016ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள 2ம் நிலை அப்பீல் மனுக்களை நீதிபதி வேல்முருகன் விசாரிக்கிறார்.
நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மணல் மற்றும் தாதுக்கள், சிறு மனுக்கள், நில சட்ட மனுக்கள், தியாகிகள் பென்ஷன் வழக்கு, 2022ம் ஆண்டில் தாக்கலான விவசாய உற்பத்தி சந்தை தொடர்பான வழக்கு, ரிட் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி என்.சதீஷ்குமார், 2021ம் ஆண்டில் தாக்கலான அப்பீல் வழக்குகளை விசாரிக்கிறார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2020ம் ஆண்டு முதல் தாக்கலான தொழிலாளர் மற்றும் அரசு பணியாளர் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறார். நீதிபதி அப்துல் குத்தூஸ், 2017ம் ஆண்டில் இருந்து தாக்கலான 2ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.
நீதிபதி ஆர்.தாரணி, போலீசாருக்கு உத்தரவிட கோரும் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி பி.டி.ஆஷா, வரிகள், வனம், தொழில்துறை, அறநிலையத்துறை, வக்பு வாரியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள், 2019ம் ஆண்டு வரை தாக்கலான கிரிமினல் அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி சி.சரவணன், சிவில் சீராய்வு மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி பி.புகழேந்தி 2015ம் ஆண்டு வரையிலான கனிம வளம் நில சீர்திருத்தம் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தாக்கலான மணல் மற்றும் தாதுக்கள், நில சட்டம், பொது ரிட் மனுக்களை விசாரிக்கிறார்.
நீதிபதி ஜி. இளங்கோவன், 2022ம் ஆண்டு முதல் தாக்கலான போலீசாருக்கு உத்தரவிட கோரும் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி கே.முரளி சங்கர், சிபிஐ ஊழல் தடுப்பு வழக்குகளையும், 2019ம் ஆண்டு தாக்கலான கிரிமினல் மனுக்களையும், 2020ம் ஆண்டு முதல் தாக்கலான கிரிமினல் அப்பீல் மனுக்களையும் விசாரிக்கிறார். நீதிபதி எஸ்.மதி, 2019ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள தொழிலாளர் மற்றும் அரசு பணியாளர் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறார். நீதிபதி ஆர்.விஜயகுமார், 2020ம் ஆண்டு வரை தாக்கலான சிவில் துளை அப்பீல் மனுக்களையும், சிவில் 2ம் நிலை அப்பீல் மனுக்களையும் விசாரிக்கிறார்.
