ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 2010ம் ஆண்டு ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்ற தலைவி செல்வி ஆனந்தன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கப்பட்டது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின்மூலம் இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் 2017ம் ஆண்டு இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தலைமை ஆசிரியர் உள்பட 22 ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 5 பேர், பகுதிநேர ஆசிரியர்கள் 3 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியில் பல்வேறு கிராம பகுதியில் இருந்து 700 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி, சென்ற ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 சதவீத தேர்ச்சியும், 10ம் வகுப்பில் பொது தேர்வில் 90 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் இல்லாமல் உள்ளது. இதனால் பல ஆண்டுகளாக பள்ளி வராண்டாவில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயிலும் நிலை உள்ளது. மேலும் ஆய்வு கூட கட்டிடமும் இல்லாததால், பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
மேலும், பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் பகல் நேரத்தில் கால்நடைகளின் நடமாட்டமும், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் உள்ளது. அதேபோல், பள்ளிக்கு மிதிவண்டிகளில் வரும் மாணவர்களுக்கு, அவைகளை நிறுத்த மேற்கூரையுடன் கூடிய ஷெட் இல்லாததால், திறந்தவெளியில் நிறுத்திவிட்டு ெசல்கின்றனர். இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் மிதிவண்டிகள் வீணாகும் நிலை உள்ளது.
எனவே, அரசு மேல் நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும். ஆய்வு கூட கட்டிடம் தனியாக கட்ட வேண்டும். மதிவண்டிகளை நிறுத்த மேற்கூரையுடன் ஷெட் அமைத்து தர வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
