மதுரை: ‘அதிமுக அழிவுக்கு பழனிச்சாமியின் ஆணவம், அகங்காரம்தான் காரணம்’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்து உள்ளார். ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி நேற்று, மதுரை, கோச்சடையில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது தவறானவர்கள் கையில் இரட்டை இலை சின்னம் உள்ளது. லட்சியத்திற்காக அமமுக தொடங்கப்பட்டது. வியாபார நோக்கோடு, லாபத்திற்காக எடப்பாடியுடன் சிலர் இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் இருந்தும் பழனிசாமியால் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை. அதிமுக அழிவுக்கு காரணம் பழனிசாமியின் ஆணவமும், அகங்காரமும் தான். அதிமுகவை அவர் பிராந்திய கட்சியாக மாற்றிவிட்டார். அதிமுகவில் தற்போது உள்ளவர்கள் தொண்டர்கள் அல்ல. டெண்டர்வாதிகள். எங்களுக்கு துரோகம் செய்ததால் ஒரு சிலரை பார்த்து அவருக்கு அச்சம் இருக்கிறது. அதனால்தான் சேர்க்க மாட்டேன் என்கிறார். ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற முடியாது. தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று கூறியுள்ளனர். தீர்மானத்தை பற்றி எதுவும் கூறவில்லை. பழனிசாமி அகங்காரத்தில் குதிக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்காக, நாங்கள் 40 சீட் கேட்டோம். ஆனால், பழனிசாமியின் தவறான முடிவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இவ்வாறு கூறினார்.
