×

பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கு புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்-147 பேர்களுக்கு பரிசோதனை

பெரம்பலூர் : பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் நடந்த மாபெரும் புற்று நோய்க் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமில் 147 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தல் பகுதியில் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஆயுதப்படை வளாகம் உள்ளது. இங்குள்ள கூட்ட அரங்கில் நேற்று (19ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில், மாபெரும் புற்றுநோய்க் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்காக நடத்தப்பட்ட மாபெரும் புற்றுநோய்க் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமினை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி தொடங்கி வைத்தார். ஏடிஎஸ்பிக்கள் மதியழகன், பாண்டியன், டிஎஸ்பிக்கள் பழனிச்சாமி, தங்கவேல், ஜனனிப்பிரியா, இன்ஸ் பெக்டர்கள் (தனிப்பிரிவு) வெங்கடேஷ்வரன், (ஆயுதப்படை) அசோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பெண்களுக்கான உடல் பரிசோதனை, மார்பக புற்றுநோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது.

76 பெண் காவலர்கள் மற்றும் 71 காவலர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 147 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ உதவிகளும் மருத்துவ ஆலோசனைகளும் அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கத்தின் பெரம்பலூர் கிளையின் பெண் மருத்துவக் குழுவினர் மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் இணைந்து கேன்சர் நோய் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

Tags : Perambalur Armed Forces Complex , Perambalur: 147 people were examined in a special medical camp for cancer detection at Perambalur Armed Forces Complex.
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...