*அதிக மகசூல் பெறுவதற்கு முன்னோடி விவசாயிகள் ஆலோசனை
தோகைமலை : கரூர் மாவட்டம், கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். நிலக்கடலையில் டி.எம்.வி 7, டி.எம்.வி 10, கோ 3, கோ.ஜி.என் 4, கோ.ஜி.என் 5, ஏ.எல்.ஆர் 3, வி.ஆர்.ஐ 2, வி.ஆர்.ஐ 3, வி.ஆர்.ஐ.ஜி.என் 5, வி.ஆர்.ஐ 6 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை ஆகும்.
இந்த ரகங்களை சாகுபடி செய்வதற்கு ஜுன், ஜுலை மற்றும் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் விதைப்பு செய்வதற்கு ஏற்ற பருவ மாதங்கள் ஆகும். இதற்கு கோடை காலத்தில் நிலத்தை நன்றாக குறுக்கு உழவு செய்து அதில் உள்ள களைகளை நீக்க வேண்டும். இதனால் கோடை மழையில் மண்ணில் மழை நீர் சேமிக்கப்படுகிறது. இதேபோல் கோடை மழையில் சணப்பை போன்ற பயிர்களை விதைத்து பூக்கும் தருணத்தில் அதை மடக்கி உழுதும் நிலத்தை தயார் செய்து வைக்கலாம்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் விதை முளைப்புத்திறன் அதிகரிக்கப்படுவதுடன் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. ஆனால் விதைநேர்த்தி செய்யும்போது விதை உறையில் பாதிப்பு ஏற்பட்டால் முளைப்புத்திறன்கள் பாதிக்கப்படும் என்பதால், விதை நேர்த்தியை மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.
இதேபோல் விதை நேர்த்தி செய்யாவிட்டால் ஏக்கருக்கு ரைசோபியம் 4 பாக்கெட் (800 கிராம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 4 பாக்கெட் (800 கிராம்) உடன் 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.விதைத்தல் மற்றும் நீர் நிர்வாகம்: நிலக்கடலைக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளி விட்டு விதைக்க வேண்டும். மானாவாரி செம்மண் மற்றும் செம்புரை நிலங்களில் விதைப்புக்கருவி கொண்டு விதைக்கும் போது விதையின் அளவு குறைவதுடன் மண்ணில் ஈரம் குறைவதற்குள் விதைத்து விடலாம். விதைக்கும் சமயம் ஈரப்பதம் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் விதைத்த 4 அல்லது 5 வது நாள் உயிர்த் தண்ணீர் விட வேண்டும்.
உரங்கள் மற்றும் ஜிப்சம் இடுதல்: நிலக்கடலை உற்பத்தியில் பயிருக்கு ஜிப்சம் இடுவது மிக அவசியம். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் அடங்கி உள்ளது. ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை நிலக்கடலை விதைத்த 40 அல்லது 45 ம் நாள் இட்டு செடிகளை சுற்றி மண் அணைக்க வேண்டும்.களை நிர்வாகம் மற்றும் பயிர்பாதுகாப்பு: நிலக்கடலையில் அதிக மகசூல் பெறுவதற்கு களை கட்டுப்பாடு மிகவும் அவசியம். விதைத்த 45 நாட்களுக்குள் களைகளை கட்டுப்படுத்துவது முக்கியமாகும்.
படைப்புழு அல்லது வெட்டுப்புழு: நிலக்கடலை சாகுபடியில் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு ஸ்பைனோசாடு 0.4 மி.லி அல்லது புரோப்பனோபாஸ் 2 மி.லி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்து பயன்படுத்தலாம்.இலைப்பேன், அசுவினி, சுருள் பூச்சி, வேரழுகல் நோய்: நிலக்கடலை சாகுபடியின் போது இமிடாகுளோபிரிட் 0.4மி.லி அல்லது அசிபேட் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் இலைப்பேன் மற்றும் அசுவினியை கட்டுப்படுத்தலாம். ஒரு கிலோ விதைக்கு புரோப்பனோசோல் 2 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்கும் முன்பு விதை நேர்த்தி செய்து நடவு செய்தால் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.
அறுவடை: நிலக்கடலை சாகுபடியில் முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியை காட்டுகிறது. தோராயமாக ஒரு சில செடிகளைப் பிடுங்கி காய்களை உரிக்க வேண்டும். ஓட்டின் உட்புறம் வெள்ளையாக இல்லாமல் பழுப்பு கலந்து கறுப்பு நிறத்தில் இருந்தால் அது முதிர்ச்சி நிலையை காட்டுகிறது. அறுவடைக்கு முன்பு நீர் பாய்ச்ச வேண்டும். நீர் பாய்ந்த நிலம் சுலபமாக அறுவடைக்கு உதவும்.
மண்ணில் போதுமான ஈரப்பதம் இருந்தால் அறுவடைக்கு முன்பு நீர் பாய்ச்ச தேவையில்லை. பிடுங்கப்பட்ட செடிகளை குவியலாக வைக்கக்கூடாது. காய்ந்த காய்களுக்கு ஈரப்பதம் வருவதை தவிர்க்க வேண்டும். மேற்படி முறைகளில் நிலக்கடலை சாகுபடி செய்தால் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
