×

புதுக்கோட்டை அருகே புத்த சமய சின்னம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே புத்த சமய சின்னமான தர்ம சக்கரத்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே புதுவாக்காடு ஊரணிக்கரை அருகே நேற்று நிலத்தை அந்த பகுதி மக்கள் சீர் செய்யும் போது தர்மசக்கர சிற்பத்துடன் தூண் கல் ஒன்று தென்பட்டது. தகவல் தெரிந்த புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்ததில் இந்த சிற்பம் புத்த சமயத்தில் மிக முக்கிய சின்னமாக கருதப்படும் தர்மசக்கரம் என தெரிய வந்தது. இது குறித்து மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது:

தர்மசக்கரம் புத்தம் சமணம் மற்றும் வைணவ மதங்களில் முக்கிய சின்னமாக உள்ளது. தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ள தர்மசக்கரம் எட்டு ஆரங்களுடன் ஒரு தாங்கியில் வைக்கப்பட்டிருப்பது போல பொறிக்கப்பட்டிருக்கிறது. இது புத்த தர்மசக்கரத்தோடு தொடர்புடையது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த சக்கரத்தின் மேல்புறமாக ஒரு ஒளிக்கீற்று காட்டப்பட்டிருக்கிறது.

இது புத்தருக்கு காட்டப்படும் ஒரு முக்கியமான அடையாளமாகும். வைணவ சக்கரங்களில், இந்த தீச்சுவாலை அமைப்பு மூன்று புறங்களில் காட்டப்படும் இந்த சிற்பத்தில் மேல்புறம் மட்டும் காட்டப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தூண் சிற்பத்தில் தெளிவான கால வரையறையை கொண்ட எழுத்து பொறிப்புகள் ஏதுமில்லாவிட்டாலும், 9ம் நூற்றாண்டு தொடங்கி பதினொன்றாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக கருதலாம்.

தர்ம சக்கரத்தின் 8 ஆரங்கள் சொல்லும் தத்துவம் என்னவெனில், சரியான உயிரோட்டமான வாழ்க்கை, சரியான பார்வை, சரியான முயற்சி, சரியான கவனம், சரியான நோக்கம், சரியான நினைவாற்றல், சரியான செயல், சரியான பேச்சு என்பதாகும். புத்தர் முதன்முதலில் சாரநாத்தில் மான் பூங்காவில், ஐந்து துறவிகளுக்கு உபதேசம் செய்து நிகழ்ச்சி, முதல் தர்மசக்கர சுழற்சியாக கொள்ளப்படுகிறது. இதை குறிக்கும் வகையிலே, தர்மசக்கரத்தின் இரு புறமும் மான்கள் காணப்படுவதுண்டு. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தர்ம சக்கரத்தூண் நீர் நிலைக்கு அருகாமையில் கிடைத்துள்ளதால், மக்களுக்காக இந்நீர் நிலையை ஏற்படுத்தியவர்களால் நட்டுவிக்கப்பட்டிருக்கலாம் என்பதை அனுமானிக்க முடிகிறது.

இது போன்ற அடையாளத் தூண்கள் நிலங்களின் எல்லைகளை குறிப்பதற்கும் தாம் செய்வித்த பொதுப்பணியை, எந்நோக்கத்திற்காக செய்தோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் நட்டுவிக்கும் பழக்கம் நடமுறையில் இருந்துள்ளது. இது பவுத்த துறவிகள் அல்லது அந்த மதத்தை பின்பற்றியவர்கள் இப்பகுதியில் இருந்திருப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pudukkoda , Pudukottai : Buddhist Symbol Dharma Chakra Pillar Das Bin Pauntu Near Pudukottai.
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...