சாயல்குடி : சாயல்குடி அருகே செவல்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.செவல்பட்டி கருப்பணசாமி கோயில் வருடாந்திர பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. கருப்பணசாமிக்கு பால், சந்தனம்,விபூதி உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, கிராமமக்கள் சார்பாக பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
பிறகு இரட்டை மாடு எல்லை பந்தயம் நடத்தப்பட்டது. பெரியமாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில் 40 வண்டிகள் கலந்து கொண்டது. இரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கு பரிசுதொகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஒரு வண்டி தடம் புறண்டதால் ஓட்டாளி, சாரதி கீழே விழுந்தனர். இந்த நிலையில் அந்த ஒரு ஜோடி மாடு மாடுகள் வண்டியை இழுத்துக்கொண்டு எல்லையை நோக்கி ஓடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வண்டிகள் கலந்து கொண்டது.
இதுபோல் திருவாடானை அருகே வெள்ளையபுரத்தில் திருவாடானை சுற்றுவட்டார மாட்டு உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் வெள்ளையபுரம் கிராம மக்கள் இணைந்து ரேக்ளா ரேஸ் என்றழைக்கப்படும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி பந்தயம் பெரிய மாடு, சிறிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு ஆகிய நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் பந்தய மாடுகள் அதன் உரிமையாளர்கள் கலந்துகொண்டார்கள். இந்த பந்தயத்தில் 90க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாட்டி வண்டி ஒட்டிய சாரதிகளுக்கும் பணமும், கோப்பைகளும், கிடா பரிசாக வழங்கப்பட்டது.
