மூணாறு: மூணாறு பகுதியில் ரேஷன் கடைகளை குறி வைக்கும் காட்டுயானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறை சுற்றி உள்ள எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி நுழையும் புலிகள் அங்கிருக்கும் பசுக்களை தாக்கி பீதி ஏற்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
குடியிருப்புகளுக்குள் யானைகளும் சுற்றித் திரிவதால் மக்கள் வெளியே தலை காட்ட அச்சமடைகின்றனர். வடமேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில் காட்டுயானையின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. மூணாறில் தொழிலாளர்கள் வசிக்கும் எஸ்டேட் பகுதிகளில் ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிகிறது.
இந்த யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு ரோட்டிலும் சுற்றித்திரிகிறது. நேற்று முன்தினம் இரவு, பகுதியில் சின்னக்கானல் எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து விற்பனைக்கு வைத்திருந்த அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை தின்று தீர்த்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு காட்டு யானையை வனத்திற்குள் விரட்டினர்.
இதனால் எஸ்டேட் பகுதியில் ரேஷன் விநியோகம் தடைபட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இங்குள்ள கன்னிமலை, நயமக்காடு, கடலார், நல்லதண்ணி உள்ளிட்ட 6 ரேஷன் கடைகளை யானை அடித்து நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
