×

மின்வாரியத் துறையில் 50,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சீர்காழி: மின்வாரியத் துறையில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் துணை மின் நிலையத்தை நேற்று ஆய்வு செய்த தமிழக மின்சாரம் மற்றும் ஆய தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி:
கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் கடந்த மூன்று நாட்களாக தங்கி எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட கலெக்டர் ஆகியோருடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை செய்து வருகின்றனர்.   

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,620 மின்மாற்றிகளில், 1,984 மின்மாற்றிகளில் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. 370 மின்மாற்றிகளில் பழுதடைந்துள்ளது. இதில் 163 மின்மாற்றி அமைந்துள்ள பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 200 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. அதில் 120 மின்கம்பங்கள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த 80 மின் கம்பங்கள் மாற்றி அமைத்து இன்று (நேற்று) இரவுக்குள் மின் விநியோகம் வழங்கப்படும். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 354 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மின்வாரியத்தில் காலியாக உள்ள 50,000 காலிப்பணியிடங்கள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நிரப்பப்படும். தமிழகத்தில் 14 ஆயிரத்து 400 மின்மாற்றிகளும், இரண்டு லட்சம் மின் கம்பங்களும் இருப்பில் உள்ளது. மழையால் சேதம் அடைந்த மின் மோட்டார்கள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பிடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மின்மாற்றிகள் பழுதானால் அதனை எடுத்து செல்ல விவசாயிகளிடம் பணம் வாங்கினால், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் தொடர்ந்து எங்களை தொடர்பு கொண்டு மழை சேதப் பணிகள் குறித்து கேட்டு அறிந்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Senthilpalaji , Electricity Department, 50,000 Vacancies, Minister Senthil Balaji Information
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...