ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், மழை காலங்களில் அதிகம் பாதிப்பு ஏற்படும் இடங்களாக 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் ஆய்வு கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது.
இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு உட்பட்ட இடங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்கள் என 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கவும், கண்காணிப்பு பணி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் பேரிடர் கால ஒத்திகை, மண்சரிவு, மரம் விழுதல் போன்ற காலகட்டத்தில் எவ்வாறு தங்களை தற்காப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஊட்டி, குந்தா வட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு பணி குழுவினர் மற்றும் முதல் நிலை மீட்பாளர்கள் நடத்தினர்.
இதையடுத்து 9,10ம் தேதிகளில் கோத்தகிரி வட்டத்திலும், 11ம் தேதி கூடலூர் வட்டத்திலும், 12ம் தேதி பந்தலூர் வட்டத்திலும், 13ம் தேதி மாவட்டத்திலுள்ள முதியோர் இல்லங்களில் முதியோர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் வினோத், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை துணை ஆய்வாளர்கள் ஹரிதேவ் பந்தர், கஜேந்திர சவுத்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
