×

ஊத்தங்கரை அருகே ஏரியில் மண் கடத்தி 600 லோடு விற்பனை-பொக்லைன் சிறைபிடிப்பு

ஊத்தங்கரை : ஊத்தங்கரையில் ஏரியில் மண் கடத்திய பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் அருகே பேரூராட்சிக்குட்பட்ட சின்னப்பன் ஏரி, சுமார் 51 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஏரியை சுற்றிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர் வாரினால், அருகில் உள்ள அப்பிநாயக்கண்பட்டி, தாண்டியப்பனூர், எம்ஜிஆர் நகர், பரசுராமன் கொட்டாய், பாரதிபுரம், வண்டிக்காரன் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இந்த ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரும் பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்டு, அளவீடு பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஒப்பந்தம் எடுத்த நபர் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை பலப்படுத்தி தூர்வாரும் பணியை செய்யாமல், ஏரியில் உள்ள மண்ணை கடத்தி விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஒரு லோடு மண் ₹200 வீதம் சுமார் 600 லோடு மண்ணை எடுத்து விற்றுள்ளதாக புகார் தெரிவித்து எம்ஜிஆர் நகர் பகுதி பொதுமக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர். அவர்களை கண்டதும் பொக்லைன் டிரைவர் வண்டியை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து, அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மண்ணை திருடி விற்ற ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Uthangarai , Uthangarai: A riot broke out in Uthangarai as villagers captured a Bokline machine that had smuggled soil into a lake.
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...