திருப்பரங்குன்றம்: விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது விளாச்சேரி கிராமம். இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறைகளாக பொம்மை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் கிடைக்கும் களிமண் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மண் மூலம் பொம்மைகள் மட்டுமின்றி, சாமி சிலைகள், குதிரை பொம்மைகள் திருவிழாக்களுக்கு தேவையான அனைத்து சிலைகளும் இங்கு தயாரிக்கப்படுவது வழக்கம்.
தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் நடைபெறும் புரவி எடுப்பு போன்ற முக்கிய விழாக்களுக்கு விளாச்சேரியில் இருந்து புரவி பொம்மைகள் செய்து கொடுக்கப்படுகிறது. இந்த நடைமுறை பல நூறு ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் இந்த தொழிலை குடிசை தொழிலாக தங்கள் வீட்டில் இருந்தபடியே மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பெரும்பாலும் பொம்மை தயாரிக்கும் தொழில் செய்பவர்கள் அனைவரும் குடும்பத்துடன் இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கிறிஸ்துமஸ் போன்ற அனைத்து விழாக்களுக்கும் தேவையான விநாயகர், சரஸ்வதி, கொலு பொம்மைகளும், கருணாநிதி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பொம்மைகளும், கிறிஸ்தவ விழாக்களுக்கு தேவையான இயேசு, மாதா ஆகிய பொம்மைகளும் களிமண், பிளாஸ்ட்ராப் ஆப் பாரிஸ் போன்ற மூலப்பொருட்களால் தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கும் பொம்மைகளை தமிழகம், மட்டுமின்றி இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது இந்த நிலையில் பல தலைமுறையாக நடைபெறும் இந்த விளாச்சேரி மண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
