×

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது: திருமாவளவன்

சென்னை: திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது என விசிக எம்.பி திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடர்பாக வழங்கப்பட்டிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல தமிழ்நாட்டின் மதநல்லிணக்கச் சூழலை சீர்குலைப்பதற்கு வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது. எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க மதச்சார்பற்ற சக்திகள் உறுதியோடு ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாக பிள்ளையார் கோவில் அருகில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத் தீர்ப்புகளும் உள்ளன. அவ்வாறு இருக்கையில் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில்தான் தீபமேற்றுவோம் என்று சில பிரிவினைவாதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு ஆதரவாக சட்டத்துக்குப் புறம்பான முறையில் முதலில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தனி நீதிபதி கொடுத்தத் தீர்ப்பையே வழிமொழிந்து இப்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சமய சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் எதிரான இந்தத் தீர்ப்பு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக அமைந்துள்ளது.

170 பக்கங்கள் கொண்ட இந்தத் தீர்ப்பில் பன்னிரு திருமுறைகள் பற்றியும், மெய்கண்ட சாஸ்திரம், சிவஞானபோதம் குறித்தும் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் நெறிகள் குறித்தும் நீதிபதிகள் விவரித்துள்ளனர். ஆனால், அவர்கள் குறிப்பிடும் எந்த விஷயமும் அங்கு இருக்கும் தூண் தீபம் ஏற்றுவதற்கானதுதான் என்றோ அதில் தீபம் ஏற்றப்பட்டதென்றோ மெய்ப்பிக்கவில்லை. இந்த வழக்கு அந்தத் தூணில்தான் தீபம் ஏற்றவேண்டும் என வாதிடும் ஒரு நபரால் தொடரப்பட்டுள்ளது. அவரிடம் அதற்கான ஆதாரத்தை நீதிமன்றம் கேட்டிருக்கவேண்டும். அது தான் சட்டப்படியான வழிமுறை. அதற்கு மாறாக கோயில் நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் அது தீபம் ஏற்றும் தூண் இல்லை என நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். இது என்ன வகையான நீதியென்று புரியவில்லை.

இந்து சமய அறநிலையத்துறைக்காக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவர் அந்தத் தூண் எதற்காக நாட்டப்பட்டது எனத் தெரியவில்லை எனக் கூறியதாகவும், இன்னொருவர் அது தீபம் ஏற்றுவதற்கானதுதான் ஆனால் சமணத் துறவிகள் இரவு நேரத்தில் அதன் கீழே அமர்ந்து விவாதிப்பதற்காக நாட்டப்பட்டது என்றும் கூறியதாகத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பைப் படிக்கும்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளில் ஒருமித்த நிலை இல்லை என்பதாகத் தோன்றுகிறது. இது கவலை அளிப்பதாக உள்ளது. மேல் முறையீடு செய்யும்போது அரசாங்கத்தின் நிலை தெளிவாக விளக்கப்பட வேண்டும். அதற்குரிய வழிகாட்டுதல்களைத் அரசு தலைமை வழக்கறிஞர் அளிக்க வேண்டும்.

சுதந்திரம் பெற்ற பிறகு நீதிமன்றங்கள் ஆதாரங்களின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும் தீர்ப்புகளை வழங்கி வந்தன. அண்மைக்காலமாக அந்த நிலை மாறி இப்போது நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதை ‘சுதேசி நீதிபரிபாலன முறை’ என சில நீதிபதிகள் அழைக்கவும் தொடங்கியுள்ளனர். அந்த வகையான தீர்ப்புகளின் வரிசையில் இந்தத் தீர்ப்பையும் வைக்கலாம். அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைவே சிதைப்பதுபோல அதற்கு விளக்கமளிப்பது அரசமைப்புச் சட்டத்தை அழிப்பது தவிர வேறல்ல. அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரான இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து வட மாநிலங்களில் நிகழ்வதுபோல இங்கும் வகுப்புக் கலவரங்களை நடத்த சில பிரிவினைவாதிகள் மும்முரமாக உள்ளனர். அவர்களுக்கு இடங்கொடாமல், மக்கள் ஒற்றுமையைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவவும் அனைத்து சனநாயக சக்திகளும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : High Court ,Thirupparangunram ,Deepa ,Thirumaalavan ,Chennai ,Supreme Court ,Justice Department ,Visiga M. P Thirumaalavan ,Madurai Session ,Chennai High Court ,Thiruvangunram ,
× RELATED தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து...