×

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!!

சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் – தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திங்கள்கிழமை (ஜன.5) மாலையில் தென்கிழக்கு வங்கக்கடல் – பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவியது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை காலையில், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும் அதே திசையில் நகா்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக ஜன.9ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூா், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Southeast Bank Sea ,Chennai ,Indian Meteorological Survey ,IMCI ,southeastern Bank Sea ,equatorial Indian Ocean ,South Bengal ,
× RELATED மிரட்டலுக்கு பணிந்தது அதிமுக – பாமக (அ)...