கடலூர்: கடலூர் அருகே அருகே வானமாதேவி கெடிலம் ஆற்றுப்பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் அக்கிராம பகுதியினர் 12 மாட்டு வண்டிகளை மணலுடன் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் வானமாதேவி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேர்க்காம் பாளையம், பெத்தாங்குப்பம், கட்டார சாவடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் இறந்த சடலங்களை கெடிலம் நதிக்கரையில் அடக்கம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக மாட்டுவண்டியில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இறந்தவர்களின் சடலத்தை புதைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு காவல்துறையிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க தீர்மானம் நிறைவேற்றினர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மணல் கொள்ளையை தடுக்கும் விதமாக ஆற்று பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி வெட்டி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 12 மாட்டு வண்டிகளில் கெடிலம் நதிக்கரையில் மணல் ஏற்றி வந்துள்ளனர். அவர்களை ஊர் பொதுமக்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்தனர். பலமுறை காவல் துறையிடம் முறையிட்டும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் ஊர்மக்கள் ஒன்றுகூடி மணல் கொள்ளையில் ஈடுபட்ட மாட்டுவண்டிகளை சிறை பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருவாய் மற்றும் காவல்துறையினர் சென்று மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடித்துச் சென்றனர் கடலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை காவல்துறை உதவியுடன் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு தரப்பில் இயக்கப்படும் மணல் குவாரிகளிலும் கண்காணிப்புகள் இல்லாததால் மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
