மேலூர்: மேலூர் அருகே சுடுகாட்டை ஆக்கிரமித்து சாலை மற்றும் கால்வாய் அமைத்து விட்டதால், புதைத்த இடத்திலேயே மறுபடியும் மறுபடியும் சடலங்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. குழி தோண்டும் போது கிடைக்கும் மண்டை ஓடுகள் வெளியே வீசப்படுவதால் சிறுவர்கள் எடுத்து விளையாடும் அவலம் நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் பட்டூரில் கிராம மக்களுக்கான பொது மயானம் தனக்கம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது. சுமார் 800 குடும்பத்தை சேர்ந்த அனைத்து ஜாதியினருக்கும் பொதுவான சுடுகாடு இது. 6 சென்ட் இடத்தில் அமைந்திருந்த இந்த சுடுகாட்டை சாலை அமைக்க மற்றும் கால்வாய் அமைக்க என்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, தற்போது இது 2 சென்ட் இடமாக சுருங்கி விட்டது.
போதிய இடவசதி இல்லாததால் உடல்களை புதைக்க வருபவர்கள் ஏற்கனவே புதைக்கப்பட்ட உடல்களின் எலும்புகளை தோண்டி அப்புறப்படுத்தி விட்டு அங்கு புதைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள எந்த உடல்களும் 3 மாதத்திற்கு மேல் பூமிக்கடியில் இல்லாமல் தோண்டி எடுத்து வெளியில் போடும் அவலம் உள்ளது. இப்படி வெளியில் வீசப்படும் மண்டை ஓடு, எலும்புகளை அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் இழுத்து செல்கிறது. இது போக அறியாத சிறுவர்கள் மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு துண்டுகளை எடுத்து விளையாடும் நிலையும் உள்ளது. உடனடியாக ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு சுடுகாட்டுடன் இணைக்க வேண்டும், இல்லையேல் மாற்று இடம் சுடுகாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பட்டூரை சேர்ந்த சின்னையா கூறியதாவது: இப்பகுதியில் 800 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். இறந்தவர்களின் உடல்களை புதைக்க போதிய இடவசதி சுடுகாட்டில் இல்லை. ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள சுடுகாட்டை மீட்க வேண்டும் என பல வருடங்களாக அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. உடல்களை எரிப்பதில் பிரச்னை இல்லை, இதற்காக தனி தகன மேடை உள்ளது. ஆனால் அனைவரும் எரிப்பதில்லை. பலரும் புதைக்கவே விரும்புகிறார்கள். தோண்டி எடுத்து வெளியில் போடப்படும் எலும்புகளை சிறுவர்கள் எடுத்து அறியாமல் விளையாடுகின்றனர். சாலையை ஒட்டி இந்த சுடுகாடு அமைந்துள்ளதால் இவ்வழியாக தனக்கம்பட்டி செல்லுபவர்கள் இரவு நேரத்தில் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர்.
குறிப்பாக பெண்கள் இரவு நேரத்தில் இவ்விடத்தை கடக்க மிக மிக அச்சப்படுகின்றனர். இந்த இடத்தில் தெருவிளக்கு அமைத்து தருவதுடன், தண்ணீர் வசதியும் செய்து தர வேண்டும். இல்லையேல் போதிய இட வசதியுடன் மாற்று இடத்தை அதிகாரிகள் எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டு. இவ்வாறு அவர் கூறினார். வாழும் போது ஆயிரம் பிரச்னைகளை சந்திக்கும் மனிதன், இறந்த பிறகே அமைதி கொள்வதாக கூறுவார்கள். ஆனால் இங்கு இறந்து பூமிக்கு அடியில் சென்றாலும் நிம்மதியாக இருக்க முடியாமல் தோண்டி எடுத்து விடும் அவலம் நிகழ்கிறது. உரிய அதிகாரிகள் இப்பகுதி மக்களின் துயர் போக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
