திருவனந்தபுரம்: முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷண் விருது அறிவித்தது ஏற்கத்தக்கதல்ல என்று கேரள முன்னாள் டிஜிபி சென்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக இருந்தவர் நம்பி நாராயணன். நெல்லை மாவட்டத்ைத சேர்ந்த இவர், இஸ்ரோவில் பணிபுரிந்தபோது விண்வெளி ஆய்வு ரகசியங்களை வெளிநாட்டிற்கு கடத்தியதாக கடந்த 1994ம் ஆண்டு புகார் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,
இதுதொடர்பாக கேரள போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து நம்பி நாராயணன், மாலத்தீவை சேர்ந்த மரியம் ரெஷிதா, பவுசியா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை குழுவில் அப்போதைய எஸ்பி சென்குமாரும் இடம் பெற்றிருந்தார். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சுமார் 24 வருடங்கள் நடந்த வழக்கில் கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதில் நம்பி நாராயணன் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் தவறு செய்த அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட ஒரு கமிட்டியை நியமித்தது.
இந்தநிலையில் தன்னை பொய் வழக்கில் கைது செய்த சென்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ரூ.1 கோடி நஷ்டஈடு கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, நம்பி நாராயணனுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதுபற்றி முன்னாள் டிஜிபி சென்குமார் திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;விண்வெளி ஆய்வு மைய ரகசிய கடத்தல் தொடர்பான வழக்கு இன்னும் முடிவடையவில்லை. இதுதொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட ஒரு கமிட்டியை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி இதுவரை அறிக்ைக தாக்கல் செய்யவில்லை. ஆனால் அதற்குள் நம்பி நாராயணனுக்கு அவசரப்பட்டு பத்மபூஷண் விருது அறிவித்தது ஏற்கத்தக்கதல்ல.இந்த விருதை அவருக்கு அறிவித்ததன் மூலம் பத்மபூஷண் விருதுக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது. நம்பி நாராயணன் ஒரு சிறந்த விஞ்ஞானி அல்ல. அவர் சாராசரியை விட குறைந்த அறிவு படைத்தவர்தான். விண்வெளி ஆய்வு மைய கடத்தல் குறித்த தகவல் 1994ல் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. அதற்கு சற்று முன்னர்தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பத்ம விருதுக்கு, நம்பி நாராயணன் தகுதியற்றவர். அவர் நாட்டிற்கு எனன சேவை செய்தார் என்பதற்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விருது கமிட்டியினர் தெரிவிக்க வேண்டும். அவருக்கு விருது கொடுத்ததால் ஒரு குடம் அமுதத்தில் ஒரு துளி விஷம் சேர்ந்தது போல் ஆகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
‘நடவடிக்கைக்கு பயந்து குற்றச்சாட்டு’
இதுகுறித்து நம்பி நாராயணன் கூறியதாவது:
முன்னாள் டிஜிபி சென்குமார் கூறியதில் எந்த உண்மையும் கிடையாது. விண்வெளி ஆய்வு மைய கடத்தல் வழக்கு 24 வருடங்களாக நடந்து முடிக்கப்பட்டு விட்டது. இந்த வழக்கில் தவறு செய்த அதிகாரிகள் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் 3 பேர் அடங்கிய கமிட்டியை நியமித்தது.இந்த கமிட்டி மறுவிசாரணை நடத்த முடியாது. என் மீது பொய் வழக்கு போட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ₹1 கோடி நஷ்டஈடு கேட்டு நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கில் சென்குமார் மீதும் நான் குற்றம்சாட்டி உள்ளேன். எனவே தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பயந்துதான் அவர் என் மீது குற்றம்சாட்டி இருக்கிறார் என்றார். இந்த விவகாரம் ேகரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
