மதுரை: மதுரையில் நேற்று நடந்த பழைய கார்கள், டூவீலர்கள் கண்காட்சியில், காந்தியடிகள் பயணித்த கார், ராணுவ ஜீப்பை கண்டு பொதுமக்கள், வெளிநாட்டினர் உற்சாகமடைந்தனர். பழமைக்கு என்றைக்குமே மவுசு அதிகம். இவ்வகையில், பழங்காலத்து கார்கள், டூவீலர்கள் ஒருநாள் கண்காட்சி நேற்று மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஓட்டலில் நேற்று நடந்தது. மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்ட பகுதிகளில் இருந்தும் 35 பழமையான கார்கள், 22 டூவீலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.கண்காட்சி குறித்து ஏற்பாட்டு குழுவை சேர்ந்த லட்சுமணன், மோகன்தாஸ் கூறும்போது, ‘‘மதுரையில் இரண்டாம் ஆண்டாக இக்கண்காட்சி நடக்கிறது. கடந்த முறை 10 பழைய வாகனங்களே வந்தன. தற்போது மும்மடங்கு அதிகரித்துள்ளது. பழமையை பாதுகாக்கும் உணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழமையான ஒவ்வொரு காருக்கு பின்னேயும் ஒரு வரலாறு இருக்கிறது. அனைத்துமே பெட்ரோலில் இயங்கும் வாகனங்கள்தான். இப்போதும் இயங்கும் நிலையில் இருப்பவை. மதுரை வந்த காந்தியடிகளுடன் பயணம் செய்த 1937ம் ஆண்டு மோரீஸ் 81 கார் முதல், ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட இடப்புற ‘டிரைவ்’ வசதியுடைய 1965ம் ஆண்டிலான வில்லிஸ் ஜீப் வரை காட்சிக்கு வைக்கப்பட்டது. இம்பாலா, அம்பாசிடர் பழைய மாடல் கார்கள், பிஎஸ்ஏ, டிரையம்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பழமையான டூவீலர்கள், இந்த வாகனங்களில் இருக்கும் பழமைத்தொழில் நுட்பங்களும் காண்போரை வியக்க வைக்கும்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
