![]()
ரகசிய கேமராக்களின் மூலம் படமாக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளில் விற்று, கோடிக்கணக்கான ரூபாய் பணம் சம்பாதிக்கும் சமூக விரோத கும்பலை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அந்த கும்பலை சேர்ந்த சிலரை நபி நந்தி, சரத் கொல்கின்றனர். இதற்கிடையே கல்லூரி மாணவி சுவாசிகாவை ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் கும்பல் சீரழித்து கொல்கிறது. இதுபோன்ற வக்கிர ஆசாமிகளை போலீசாரும், நபி நந்தியும் என்ன செய்தனர் என்பது மீதி கதை.
ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.விஜயசேகரன். தங்கைக்காகவே வாழும் நபி நந்தி இயல்பாக நடித்திருக்கிறார். தங்கை வேடத்தில் வரும் ‘லப்பர் பந்து’ சுவாசிகாவின் பரிதாப முடிவு உருக வைக்கிறது. ஒரு பாடல் காட்சிக்கு பூனம் கவுர், சினேகன் நடனமாடி இருக்கின்றனர். மற்றும் சரத், போலீஸ் அதிகாரி வேல.ராமமூர்த்தி, சங்கிலி முருகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி வரதராஜன் ஆகியோர் கச்சிதமாக நடித்துள்ளனர்.
மலையின் அழகையும், மற்ற காட்சிகளையும் ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர் யதார்த்தமாக படமாக்கியுள்ளார். மரியா மனோகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை, காட்சிகளின் நகர்வுக்கு உதவியிருக்கிறது. எஸ்.டி.சுரேஷ் குமாரின் வசனம் யதார்த்தமாக இருக்கிறது. அழுத்தமான கதையை கமர்ஷியல் மசாலாவாக சொல்லியிருப்பதால், அதன் வலி மேலோட்டமாகவே இருக்கிறது.
