சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டீப் ஃபேக் முறையில் ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து முன்பு வீடியோ வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். ராஷ்மிகாவுடன் இந்த பிரச்னை முடியவில்லை, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், சமந்தா, தமன்னா என தொடர்ந்து நடிகைகளின் புகைப்படங்கள் மோசமாக எடிட் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்போது ஸ்ரீலீலா மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோரின் புகைப்படங்கள் ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து ஸ்ரீலீலா கூறியது: ஒவ்வொரு பெண்ணும் ஒருத்தரின் பேத்தியாகவோ, மகளாகவோ, அக்கா, தங்கையாகவோ, தோழியாகவோ இருப்பார்கள், ஏன் இப்படி பண்றீங்க. ஆன்லைனில் நடக்கும் பல விஷயங்களைப் பற்றி நான் அறியாமல் இருந்தேன். இதை கவனத்திற்குக் கொண்டு வந்த என்னுடைய நலம் விரும்பிகளுக்கு நன்றி. நான் எப்போதும் என் சொந்த உலகில் வாழ்ந்து வருகிறேன், ஆனால் இது மிகவும் வருத்தமளிப்பதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எனது சக ஊழியர்களும் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்வதைக் காண்கிறேன், மேலும் அனைவரின் சார்பாகவும் நான் இதைத் தெரிவிக்கிறேன்.
அன்புடனும் கண்ணியத்துடனும், என் பார்வையாளர்களின் மீதுள்ள நம்பிக்கையுடனும், தயவுசெய்து எங்களுக்கு ஆதரவாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் சட்டத்துறையினர் இந்த விஷயத்தைக் கவனித்துக்கொள்வார்கள்” என பதிவு செய்துள்ளார். அதேபோல் நடிகை நிவேதா தாமஸ் சேலையை அரைகுறையாக அணிந்து நிற்பது போன்ற ஏஐ வீடியோக்களையும் நெட்டிசன்கள் உருவாக்கி அதிகம் பரப்பி வரும் நிலையில், உடனடியாக அதை எல்லாம் நீக்கவில்லை என்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன் என நிவேதா தாமஸ் எச்சரித்துள்ளார்.
