×

துளு பேசும் செல்லக்கிளி சிரா ஸ்ரீ!

சமீபத்தில் வெளிவந்து தமிழ் ரசிகர்களை கவனிக்க வைத்த படம் ‘அகவன்’. இதில் நாயகியாக நடித்தவர் சிராஸ்ரீ. தன்னுடைய இயல்பான நடிப்பு மூலம் அட... யார் இந்த ஹீரோயின்? என்று எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். கல்லூரித்தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தவரை பேட்டிக்காக டிஸ்டர்ப் செய்தோம்.

சிரா ஸ்ரீ - சிறு குறிப்பு வரைக...

முதலில் பெயருக்கான அர்த்தத்தை சொல்லிவிடுகிறேன். சிராஸ்ரீ என்ற பெயருக்கு தமிழ்ப் பதம்  ‘எப்போதும்’. நான் பிறந்தது மங்களூர். அப்பா சில வருடங்களுக்கு முன்பு தவறிவிட்டார். அம்மா இல்லத்தரசி. அண்ணன் சிரஞ்சீவி பிசினஸ் பண்றார். தற்போது பி.ஏ. பைனல் பண்றேன். படிக்கும்போதே சினிமா ஆசை வந்துவிட்டது. அந்த சமயத்தில் நடிகையாக வேண்டும் அல்லது ஏர் ஹோஸ்டஸ் ஆகவேண்டும் என்று இரண்டு ப்ளான் வைத்திருந்தேன். கொழுக் மொழுக்குன்னு இருந்ததால் ‘ப்ளான் ஏ’ எளிதில் ஒர்க் அவுட்டாகிவிட்டது.

கல்லூரியில் படிக்கும் போது கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனுபவம் இருந்ததால் சினிமாவுக்கு வந்தபோது ஸ்டார்ட்டிங் டிரபிள் இல்லாமல் நடிக்க முடிந்தது. மற்றபடி சினிமாவைப் பார்த்துதான் சினிமாவைக் கற்று கொண்டேன். எல்லா மொழி படங்களையும் பார்த்து என்னுடைய சினிமா அறிவை வளர்த்துக் கொண்டு வருகிறேன். தமிழில் ரஜினி நடித்த ‘எந்திரன்’, விஜய் நடித்த ‘சர்கார்’, சூர்யா நடித்த ‘24’ என்று முன்னணி நடிகர்களின் படங்கள் பார்த்துள்ளேன். ப்ளஸ் டூ படிக்கும் போது தாய்மொழியான துளு மொழியில்தான் முதல் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்துக்குப் பிறகு கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போ கூட கன்னடம், தெலுங்குலே தலா ஒரு படம் நடித்து வருகிறேன்.

தமிழ் சினிமா அனுபவம் எப்படி இருந்தது?

தமிழ் பேசுவதைத் தவிர வேறு எதுவும் கடினமாகத் தெரியவில்லை. இயக்குநர் எனக்காக ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்திருந்தார். அதன் மூலம் தமிழ் மொழியின் உச்சரிப்பு, கலாச்சாரம், எந்த வசனத்தை எப்படி பேசவேண்டும் என்ற வாய்ஸ் மாடுலேஷன் உட்பட சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. படத்தில் எனக்கு வில்லேஜ் ரோல் என்பதால் படம் முழுக்க தாவணியில் நடித்தது புது அனுபவமாகத் தெரியவில்லை. என்னுடைய அறிமுகப் படமான துளு படத்திலும் வில்லேஜ் ரோல் என்பதால் தாவணி காஸ்டியூமில்தான் நடித்தேன்.

இயக்குநர் ஏழுமலை சார் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்ததால் கஷ்டம் இல்லாமல் நடிக்க முடிந்தது. கஷ்டப்பட்டு நடித்த காட்சி என்றால் ஹீரோ என்னை கோயிலில் துரத்தும் காட்சியைச் சொல்லலாம். அந்தக் காட்சியில் இருளில் ஓட வேண்டும். அப்படி ஓடும்போது  காலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காட்சிக்கு கிடைத்த பாராட்டால் வலி பறந்துவிட்டது. மற்றபடி ஐ லவ் தமிழ்நாடு. இங்கு கிடைக்கும் சாம்பார் இட்லிக்கு நான் அடிமை.

பல மொழிகளில் நடிப்பதால் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களா?

ஒரே மொழியில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்ததில்லை. தமிழ் நாட்டில் பிறந்த எத்தனையோ நடிகைகள் பாலிவுட்டில் புகழ் அடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் எல்லா மொழி படங்களும் பண்ண வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

சினிமாவில் உங்கள் லட்சியம்?

நிறைய படங்கள் பண்ணி பணம் சம்பாதிக்கணும் என்பதைவிட நல்ல படங்களில் நடிக்கணும். மக்கள் என்னை அங்கீகரிக்கணும். பல விருதுகள் வாங்கணும்.

நடிக்க விரும்பும் கேரக்டர்?

குறிப்பாக எதுவும் இல்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கணும். சுயசரிதை கதைகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். சமீபத்தில் வெளிவந்த ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு கிரேட்.

கிளாமர் பண்ணுவீங்களா?

கண்டிப்பா பண்ணுவேன். அதில் சில நிபந்தனைகள் இருக்கும். என் கேரக்டர், கதை நல்லா இருந்தால் கிளாமர் பண்ணுவேன். ‘டப்பு’ வருகிறதே என்பதற்காக எந்த கட்டத்திலும் கிளாமர் பண்ணமாட்டேன்.

போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?

கோடம்பாக்கம் என்றில்லை. எல்லா இடங்களிலும் போட்டி இருக்கிறது. போட்டி இருந்தால்தான் சாதிக்க முடியும். சக நடிகைகளுடன் உள்ள போட்டியை சந்தோஷமாகப் பார்க்கிறேன். உண்மையில் இந்த போட்டி ஜெயிக்க வேண்டும் என்ற வேகத்தைத் தூண்டுகிறது.

உங்க பலம்?

சாப்பாட்டில் இருக்கிறது. நல்லா சமைப்பேன். நல்லா சாப்பிடுவேன். அசைவமாக இருந்தால் ஒரு பிடி பிடிக்காமல் விடமாட்டேன். அப்புறம் நல்ல தூக்கம். மனதில் கவலையைத் தேக்கி வைக்கமாட்டேன்.

Tags : Chelli Shira Siri ,
× RELATED தீவுகளில் உருவான மழை பிடிக்காத மனிதன்