×

ஐந்தே மாதத்தில் 1000 கோடி!அதுவும் மல்லுவுட்டில்

சென்னை: இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரம்மயுகம், ஆடு ஜீவிதம், ஆவேஷம் என அடுத்தடுத்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் கடந்த ஐந்தே மாதங்களில் 1000 கோடி ரூபாய் வசூல் என்ற இலக்கை மலையாள சினிமா எட்டியுள்ளது. கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 2018, கண்ணூர் ஸ்குவாட், ஆர்.டி.எக்ஸ், ரொமான்ச்சம், நேரு உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றன.

இதன் விளைவாக மலையாள படங்கள் உலகளவில் 500 கோடி வசூல் ஈட்டின. இந்த வசூல் எண்ணிக்கை இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. அதுவும் வெறும் 5 மாதங்களில். 5 வருடங்களுக்கு முன்பு வரை ஒரு மலையாள படம் ரூ.30 கோடி வசூலித்துவிட்டாலே அதுவே பெரிய வெற்றியாக கருதப்பட்டது. அந்த அளவுக்கு மலையாள சினிமாவின் வளர்ச்சி குறுகியதாக இருந்தது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் மலையாள படங்களுக்கு கேரளாவிலும் வளைகுடா நாடுகளிலும்தான் வசூல் இருக்கும்.

ஆனால் கடந்த ஓரிரு ஆண்டுகளாக மலையாள படங்களின் தரம் பெருகியதால், உலகம் முழுவதற்கும் இந்த படங்களுக்கான ரசிகர்களும் பெருகி வருகின்றனர். இதன் விளைவாகத்தான் மலையாள சினிமா பெரிய அளவில் இந்த ஆண்டு சாதித்திருக்கிறது. சமீபத்தில் பிருத்விராஜ் நடிப்பில் ‘குருவாயூரம்பளா நடையில்’ படம் வெளியாகியது. இப்படம் வெளிவருவதற்கு முன், மலையாள படங்கள் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை உலகளவில் ரூ.985 கோடி வசூலித்திருந்தது.

மே மாதம் வெளியான ’குருவாயூரம்பளா நடையில்’ படம் உலகளவில் ரூ.41 கோடி வரை வசூலித்துள்ளது. இப்படத்தின் வசூலை சேர்த்து வரலாற்றில் முதல் முறையாக ரூ.1000 கோடி வசூல் இலக்கை மலையாள திரையுலகம் எட்டி புதிய சாதனைப் படைத்துள்ளது.  மஞ்சும்மல் பாய்ஸ் படம் ரூ.249.94 கோடியும், பிரேமலு ரூ.127 கோடியும் ஆடு ஜீவிதம் ரூ.157.44 கோடியும், ஆவேஷம் படம் ரூ.153,52 கோடியும் வசூலித்துள்ளன. இந்த படங்களால் மட்டுமே ரூ.690 கோடி வசூல் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான கேப்டன் மில்லர், அயலான் ஆகிய படங்கள் ஓரளவிற்கு திரையரங்கத்திற்கு மக்களை அழைத்து வந்தன. இதனை தவிர்த்து விஜயின் கில்லி படம் மறுவெளியீட்டு செய்யப்பட்டு 20 கோடிவரை வசூல் ஈட்டியது. அரண்மனை 4, இங்கு நான்தான் கிங்கு படங்கள் வசூல் ஈட்டி வருகின்றன. ஆனாலும் மலையாள படங்களுடன் போட்டியிடும் அளவுக்கு தமிழ் படங்களின் வசூல் அமையவில்லை.

பாலிவுட்டில் இந்த ஆண்டு ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ஃபைட்டர் படம் ரூ.358.89 கோடி, அஜய் தேவ்கன், மாதவன் நடித்த ஷைத்தான் ரூ.213.64 கோடி வசூலித்துள்ளன. கடந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு படங்கள் தலா ரூ.1000 கோடி வசூல் ஈட்டின. ஆனால் இந்த ஆண்டு பெரிய தாக்கத்தை பாலிவுட் ஏற்படுத்த தவறியுள்ளது. தெலுங்கிலும் தில்லு ஸ்கொயர், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் ஆகியவை மட்டுமே வெற்றி பெற்றன.

The post ஐந்தே மாதத்தில் 1000 கோடி!அதுவும் மல்லுவுட்டில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Malluwood ,CHENNAI ,Manjummal Boys ,Premalu ,Brahmayugam ,Aadu Jeevitham ,Avesham ,Malayalam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரூ7 கோடி வாங்கி ஏமாற்றியதாக புகார்;...