×

வள்ளுவம் மொழியும் மாண்புமிகு மங்கை

குறளின் குரல் - 102

உலக மகளிர் தினம், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி கொண்டாடுகிறோம். இன்று பெண்ணியம் என்ற வார்த்தை பரவலாகப் பேசப்படுகிறது. பெண்களைக்  குறித்து வள்ளுவரின் சிந்தனைகள்தான் என்ன? அவை பிற்போக்கானவையா? அல்லது அவர்களின் முன்னேற்றத்திற்கு எதிரானவையா? சிந்திக்க வேண்டிய  கேள்வி இது.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.’ (குறள் எண் 60)

இல்லறமே பெண்ணுக்கு நல்லறம். அதன் சிறப்பு நல்ல குழந்தைகளைப் பெறுதல்.

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்.’ (குறள் எண் 52)

 குடும்பத்திற்குப் பெருமை சேர்க்காத பெண்ணின் வாழ்க்கை எத்தனை பெருமை உடையதாக இருந்தாலும் பயனில்லை.

`பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.’ (குறள் எண் 54)

 கற்பு என்கிற திண்மை பெண்ணிடம் இருக்குமானால் அதைவிட வலிமை வேறெதுவும் இல்லை.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.’ (குறள் எண் 55)

தெய்வத்தைக் கூடத் தொழாமல் கணவனைத் தொழுபவள் தன் வாழ்வில் எழுவாள். அவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.’  (குறள் எண் 56)

 தன்னைக் காத்துக் கொண்டு தன் கணவனையும் காத்து சோர்வில்லாதவளாய் இயங்குபவள் பெண்.

`சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.’ (குறள் எண் 57)

 பெண்களை நான்கு சுவர்களுக்குள் உள்ளே வைத்துக் காவல் காத்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் தங்களின் ஒழுக்கத்தால் தங்களைத்  தாங்களே தற்காத்துக் கொள்வதுதான் காவல்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.’ (குறள் எண் 148).

 பெண்கள் விஷயத்தில் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் குறள் இது. பிறன் மனைவியை ஏறெடுத்தும் பாராமல் இருப்பதே ஆணின்  பேராண்மை. அவனே சான்றோன் என கூறுகிறது வள்ளுவம்.    மனிதம் என்ற வார்த்தைக்கு உட்பட்டதுதான் பெண்ணியம் என்ற சொல் என்பதைப் பலர்  சிந்திப்பதில்லை. சரியான பெண்ணியம் நடைமுறைப் படுத்தப்பட்டால் அதனால் விளையும் பயன் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்குமானதே.

இன்று பெண்கள் படிக்கிறார்கள். வேலைக்குப் போகிறார்கள். குடும்பத்தில் ஆண் ஒருவனே பொருளீட்டுபவனாக இருந்த காலம் மறைந்து இப்போது பெண்களும்  பொருளீட்டத் தொடங்கியுள்ளார்கள். குடும்பம் ஒற்றை மாட்டு வண்டியாய் இருந்த காலம்போய் இப்போது இரட்டை மாட்டு வண்டியாய் மாறியுள்ளது. குடும்பத்தின்  பொருளாதாரச் சுமையை ஆண்,பெண் இருவரும் பகிர்ந்து கொள்ளும்போது உண்மையில் ஆணின் சுமை குறைகிறது.

அதேநேரம் பாரம்பரியச் சிந்தனைகளில் தோய்ந்த ஆண்மனம், தனக்கு இணையாகப் பெண் பொருளீட்டும்போது அவளுக்கு இணையாகத் தானும் குடும்ப  வேலைகளில் பங்கேற்க வேண்டும் என்பதை ஏனோ நினைத்துப் பார்ப்பதில்லை. பெண் அலுவலகப் பணி, குடும்பப் பணி என்ற இரட்டை நிலைப்பாடுகளால்  அல்லலுறுகிறாள். எனவே இன்றைய பெண் கல்வி, பெண் வேலைவாய்ப்பு ஆகியவை, ஆண்மனம் அதற்கேற்ற வகையில் பக்குவப்படாததால் பல நேரங்களில்  பெண்ணுக்கு சுதந்திரம் தருவதை விடவும் மனச் சோர்வையே அதிகம் தருகின்றன. இந்நிலை மாற வேண்டுமானால் ஆண்கள் மாற வேண்டும்.

கணவன் தன் மனைவிக்குத் தந்தையுமாகிறான் என்ற உணர்வோடு அவன் இயங்க வேண்டும். எந்தத் தந்தையும் தன் மகள் துன்பம் அடைவதைப் பார்த்துக்  கொண்டு வாளாவிருப்பதில்லை. தன்னால் இயன்ற உதவியைத் தன் மகளுக்குச் செய்யத் தந்தை முன்வருகிறார். அப்படி இருக்கையில் அதே உதவியைத் தன்  மனைவிக்குச் செய்வதில் என்ன தயக்கம்?    மனைவிக்கு அவள் கணவன் சில நேரங்களில் தந்தையாக  வேண்டும். பெண்கள் கணவனுக்கு தாயாக வேண்டும்.  இதுவே பிரச்னைக்குத் தீர்வு.

அப்படிப்பட்ட கணவர்கள் இருந்திருக்கிறார்களா? கடந்த காலத்தில் மிகச் சிலர் அப்படி இருந்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியவரும்  ஜகன்மோகினி பத்திரிகையின் ஆசிரியையுமான பிரபல எழுத்தாளர் வை.மு. கோதைநாயகியின் கணவர் பார்த்தசாரதி அப்படிப்பட்டவர்தான்.   எழுத்தறிவில்லாத  மனைவி சொல்லச் சொல்ல அவள் தோழி பட்டம்மாளைக் கொண்டு அந்த நாவல்களை எழுதச் செய்தார் பார்த்தசாரதி. முதல் சில நாவல்கள் அமோகமாக  விற்பனையாகவே கோதைநாயகி உற்சாகம் பெற்றார். கணவரின் தூண்டுதல் காரணமாக தன் தோழி பட்டம்மாளிடமே தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்.  அதன்பின் எண்ணற்ற நாவல்களை எழுதிக் குவித்தார். எழுத்துலகில் விறுவிறுவென அவர் பெரும்புகழ் பெற்றார்.

 அந்தக் காலத்தில் ஒரு பெண் முன்னேறுவதை ஆண்கள் பொறுத்துக் கொள்வார்களா என்ன? இந்தக் காலத்திலேயே சிலர் பொறுத்துக் கொள்வதில்லையே?  கோதைநாயகி வரும் பாதையில் அவர் ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழ்களைக் கொளுத்திப் போட்டார்கள்.   கோதைநாயகி அளவற்ற  பதற்றமடைந்தார். `இப்போது நான் என்ன செய்வது?’ என்று தன் கணவரிடம் கேட்டார். `அந்த நெருப்பின் மீது கால் வைத்து அணைத்து அதன் மேலேயே  நடந்துவா!’ எனக் கூறினார் கணவர் பார்த்தசாரதி. கணவரின் மாபெரும் ஆதரவு கோதைநாயகிக்கு இருந்ததை உணர்ந்த சமூகம் தன்னை மாற்றிக் கொண்டது.

கோதைநாயகியை எழுத்துத் துறையில் மட்டுமல்லாமல் இசைத் துறையிலும் சொற்பொழிவுத் துறையிலும் கூட ஊக்குவித்தார் பார்த்தசாரதி. கோதைநாயகியை  மேடையேறிப் பாட வைத்தார். சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதந்திர எழுச்சிச் சொற்பொழிவுகள் நடைபெறும். தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் மேடையில்  பேசுவார்கள். அதற்கான அறிவிப்பில் கடவுள் வாழ்த்து கோதைநாயகி என்று அச்சிட்டாலே அந்த தெய்வீகக் குரலைக் கேட்கவென்று எண்ணற்றோர் முன்கூட்டியே  வந்து அமர்வார்களாம். கோதைநாயகி அந்தக் காலப் பாடகியரான என்.சி. வசந்தகோகிலம், எம்.எல். வசந்தகுமாரி, டி.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலட்சுமி  போன்றோருக்கு இணையான பாடகியாகத் திகழ்ந்திருக்கிறார். இந்தப் பெருமையெல்லாம் எதனால் வந்தது? அவரது கணவர் பார்த்தசாரதி அவருக்கு ஆதரவாக  இருந்ததால் வந்தது.

எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு ஒரு சதாசிவம் கிடைத்திராவிட்டால் அவர் இத்தனை தூரம் இசைத் துறையில் முன்னேறியிருப்பாரா? தற்கால ஆண்கள்  பார்த்தசாரதியையும், சதாசிவத்தையும் தங்கள் முன்னுதாரணங்களாகக் கொள்ள வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் ஒரு பெண் உயர ஆண்களின் பாதுகாப்பு  தேவைப்படுகிறது. அது பெற்றோராகவோ உடன் பிறந்தோராகவோ கணவராகவோ ஏன் இருக்க வேண்டும்? சமூகத்தின் அனைத்து ஆண்களும் பெண்களைத்  தங்கள் சொந்த சகோதரிகளாக நினைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவ முன்வந்து விட்டால் பெண்குலம் பெரிய உயரங்களைத் தொடுமே?
  
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் ஒரு பெண் பின்னேயிருக்கிறாள் என்றால் என்ன பொருள்? தனக்கான ஆற்றல்களை வளர்ப்பதில் அக்கறை செலுத்தாமல், தன்  கணவனுக்குப் பணிவிடை செய்வதிலேயே அவள் பொழுதைக் கழிக்கிறாள் என்பதுதானே அந்தக் கூற்றின் அர்த்தம்?   குழந்தைப் பராமரிப்பு போன்ற  தவிர்க்கவியலாத காரணங்கள் இருந்தால் அந்தக் காலகட்டத்தில் மட்டும் முழுமையாகத் தன் கவனத்தைக் குடும்பக் கடமைகளில் பெண் செலுத்த  வேண்டியிருக்கலாம். ஆனால் அது இடைக்காலம் மட்டுமே. அதன் பின் பெண் தன் சொந்த ஆற்றல்களை வளர்ப்பதிலும் தன்னை முன்னேற்றுவதிலும் அக்கறை  செலுத்த வேண்டும். அதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்தப் பெண்ணுக்கு உதவவும் வேண்டும்.

  பிரபல எழுத்தாளர் அம்பை தம் சிறுகதை ஒன்றில் ஒரு பெண் இன்னொரு பெண்ணின் கையை முகர்ந்து பார்த்து `இந்தக் கையில்தான் எத்தனை நூற்றாண்டுச்  சமையல் மணம்!’ எனச் சொல்வதாக எழுதுகிறார். உண்மை தானே? பெண்ணை சமையலறைப் பதுமையாக மட்டுமே நாம் ஆராதிப்பது சரியல்ல. ஆணைப்  போலவே அவளுக்கும் உணர்வுகளும்
ஆற்றல்களும் உண்டு.

ஆனால் பெண்ணைச் சமையலறைப் பதுமையாக நாம் மாற்றியதும் இடைக்காலத்தில் வந்த தீங்குதான். முற்காலத்தில் ஆண்கள்தான் சமையல் கலையில்  வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். நமது இதிகாசம் நளன், பீமன் என்ற பிரசித்தி பெற்ற இரண்டு ஆண் சமையல் கலைஞர்களைப் பற்றித்தான் பேசுகிறது.  புராணங்களில் சமையல் கலை வல்லுநர்கள் என்ற வகையில் எந்தப் பெண் பாத்திரமும் பேசப்படவில்லை.

கணவன் -மனைவி இருவரும் மனம் ஒன்று பட்டு வாழ்ந்தால் அவர்களிடையே எந்த வேலையை யார் செய்வது என்பது பற்றி எந்தப் பிரச்னையும் வர  வாய்ப்பேயில்லை. மனம் ஒன்று படாமல் இருக்கும்போது சிக்கல்கள் உருவாகின்றன. உணர்வு பூர்வமாகப் பிரச்னைகளை அணுகாமல் அறிவுபூர்வமாக  அணுகும்போது இணக்கம் உருவாகிறது. பிரச்னைகள் தானாய் நீங்குகின்றன.

`கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்
 காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம்
 பேதைமை அற்றிடும் காணீர்!’

 என்று பாடினார் மகாகவி பாரதி. குடும்பத்தின், சமுதாயத்தின், நாட்டின் இரண்டு கண்கள்தான் ஆண்களும் பெண்களும். மகாகவி பாரதியின் வாசகம் சத்திய  வாசகம்தான். அது எல்லா இல்லங்களிலும் நடைமுறைக்கு வரவேண்டும். வள்ளுவர் சொல்லும் பொய்யாமை, கள்ளுண்ணாமை உள்ளிட்ட இன்னுமுள்ள எல்லா  அறக் கருத்துக்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்ந்ததுதான். எங்கும் ஆண்களுக்கு மட்டும் தான் அறநெறி என்று அவர் சொல்லவேயில்லை. கடவுள்  வாழ்த்தில் கூட அவர் அனைத்து மனிதர்களுக்குமான கடவுளைப் பற்றித்தான் பேசுகிறார். பெண்கள் ஆன்மிகத்தில் முன்னேற இயலாது என்பதுபோன்ற  பிற்போக்கான கருத்துக்களை அவர் தெரிவிக்கவில்லை.

 ஆனால் மகப்பேறு உள்ளிட்ட சிலவற்றை இயற்கை பெண்ணிடம் வைத்திருக்கிறது. அதனால் குடும்ப அமைப்பில் சில சிறப்புப் பணிகளைப் பெண்கள் செய்ய  வேண்டும் என்றே
வள்ளுவர் கருதுகிறார். அத்தகைய பணிகளைச் செய்வதால் அவர்கள் முன்னேற எந்தத் தடையுமில்லை. அந்தக் குடும்பத்து ஆண்கள் அந்தப் பெண்களின்  முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவ்வளவே.

  `இல்லதென் இல்லவள் மாண்பானால்’ என்றும் `தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்’ என்றும் வள்ளுவர் சொல்வதில் பெண்ணடிமைத் தனம்  இருப்பதாகக் கொள்ள வேண்டியதில்லை. தன்னை முன்னேற்றுகிற கணவனைத் தொழும்போது அவனது ஆதரவால் அவள் வாழ்வில் பெரிய உயரங்களை எட்டும்  வகையில் எழுவாள் என்பதாக அதற்குப் பொருள் கொள்ள வழியிருக்கிறது.

வள்ளுவர் சொல்லும் பெண்ணியம் சம்பிரதாய வழிப்பட்ட பெண்ணியம் தான். ஆனால் அது அடிமைப் பெண்ணியம் அல்ல. குடும்பக் கட்டமைப்பு குலைந்துவிடக்  கூடாது என்ற அக்கறை அன்றே வள்ளுவருக்கு இருந்திருக்கிறது. மனித நாகரிகத்தின் உச்சம் குடும்ப அமைப்புத்தான். எனவே அதைக் காப்பாற்றும் நோக்கில்  வள்ளுவர் தம் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறாரே அன்றி, நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகளும் கொண்டு  எந்தப் பெண்ணும் வாழ்வில் முன்னேறுவதை வள்ளுவர் ஆட்சேபிக்கவே இல்லை.

பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த பாரதி வள்ளுவரின் இந்த உள்ளார்ந்த எண்ணத்தை முற்றிலும் உணர்ந்திருக்கிறார். அதனால்தான் `கம்பனைப்போல்  வள்ளுவன்போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!’ எனக் கூறி வள்ளுவரை வானளாவக்  கொண்டாடுகிறார். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!’ எனவும் போற்றுகிறார். தனது பெண்ணுரிமைக் கருத்துக்களுக்கு  வள்ளுவர் எதிராகச் சிந்திப்பவர் எனக் கருதியிருந்தால் பாரதியின் பேனா இந்த வரிகளைத் தீட்டியிருக்குமா?

குடும்ப அமைப்பு சிதறாமல் இருக்க வேண்டும் என்பது வள்ளுவரின் விருப்பம். பெண்களின் எல்லாத் துறை முன்னேற்றங்களுக்கும் ஆண்கள் உறுதுணையாக  இருப்பதை வள்ளுவர் எங்கும் எதிர்க்கவேயில்லை. தான் சொல்லும் உயர்ந்த அறநெறிகள் அத்தனையையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்துத்தான் அவர்  சொல்லியிருக்கிறார்.

இந்தக் கருத்துக்களை நோக்கும்போது, உலக மகளிர் தினத்தில், `பிறன்மனை நோக்காத பேராண்மை’ ஆண்களுக்கு வேண்டும் எனக் கூறித் தங்கள்  பாதுகாப்புக்குக் குரல்கொடுத்த வள்ளுவரை, `பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணம் தழீஇயற்று’ எனப் பரத்தைமையை எதிர்த்த  வள்ளுவரை, எல்லாப் பெண்களும் வணக்கம் தெரிவித்துக் கொண்டாடி மகிழலாமே?
 

திருப்பூர் கிருஷ்ணன்

(குறள் உரைக்கும்)

Tags :
× RELATED ராகு கேது எதைக் குறிக்கிறது?