×

லக்னாதிபதி 8, 12ல் இருந்தால் வாழ்க்கை என்ன ஆகும்?

ஜோதிட நூல்களில் சொல்லப்பட்ட பொதுப் பலன்களை அப்படியே ஜாதகத்தில் வைத்து பலன் எதிர்பார்க்கக் கூடாது. புத்தக அறிவைவிட அனுபவ அறிவு ஒரு ஜோதிடருக்கு மிகவும் முக்கியம். ஒரே மாதிரியான ஜாதகங்கள் சிறுசிறு மாறுபாடு களால் வெவ்வேறு விதமான பலன்களைத் தரும். அதனால்தான் சில ஜாதகங்களுக்கு பலன் சொல்வதில் முரண்பாடுகள் வருகின்றன. ஒரு ஜோதிடர், ஒருமுறை அடியேனிடம் தெரிவித்தார்.

“பொழுது விடிந்து பொழுது போனால் இந்த ஜாதகங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான ஜாதகங்களைப் பார்க்கிறேன். அனுபவத்தில் பலன்களையும் கூறிக்கொண்டு இருக்கிறேன். ஆனாலும்கூட சில ஜாதகங்களில் பலன்கள் தவறி விடுகின்றன. நான்தான் சரியாக பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். நான் சரியாகத்தான் பார்த்தேன். ஆனால், கிரகங்கள் எனக்குச் சரியாக தங்கள் பலன்களை சிலர் விஷயத்தில் வெளிப் படுத்தவில்லை என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது’’ என்றார்.

ஜாதகத்தின் பலன் முழுமையாக அமைய, ஜாதகம் சரியாக இருக்க வேண்டும். பலன் சொல்லக்கூடிய ஜோதிடரும் சரியாக இருக்க வேண்டும். வந்து கேட்கும் ஜாதகருக்கும் நல்ல நேரமாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும்விட, கிரகங்கள் அந்த ஜோதிடர் மூலமாக சம்பந்தப்பட்ட ஜாதகருக்குத் தெரிவிக்க முடிவெடுக்க வேண்டும்.

எட்டாம் இடத்தில் கிரகம் இருந்தாலும், ஒன்பதாம் இடத்தில் இருப்பது போல கண்ணுக்குத் தெரியும். இந்த ஜாதகருக்கு இவர் மூலமாக பலன் சொல்ல வேண்டியதில்லை என்று கிரகங்கள் முடி வெடுத்துவிட்டால், ஜோதிடரின் கண்ணைக் கட்டிவிடும். 20 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு நண்பர் சொன்னது.

ஒரு ஜோதிடரிடம் ஜாதகப் பொருத்தம் பார்த்தார்கள். அவர் துல்லியமாகச் சொல்லக்கூடிய ஜோதிடர் என்று பெயர் எடுத்தவர். அவர் கணக்குகளைப் போட்டு, எல்லாப் பொருத்தமும் பார்த்துத்தான் கொடுத்தார். ஆனால், வாழ்க்கை சரியாக அமையவில்லை. ஒரு வருடம் கழித்து அதே ஜோதிடரிடம் இந்த இரண்டு ஜாதகங்களையும் கொடுத்தபொழுது “இவை இரண்டும் சேராதே, யார் சேர்த்தது?’’ என்று கேட்டார்.

“ஐயா நீங்கள்தான் பார்த்துக் கொடுத்தது’’ என்று சொன்ன பொழுது, அவராலே நம்ப முடியவில்லை. ஏனென்றால், இப்பொழுது வேறு விதமாக அவர் கணக்குப் போட்டு, இந்த ஜாதகங்கள் சேராது என்று சொல்லுகின்றார். இதைச் சொன்ன பொழுது, நண்பரிடத்திலே நான் சொன்னேன். பலன் சொல்லும் அந்த ஐந்து நிமிடத்தில், கிரகங்கள் ஜோதிடரின் கண்ணைக் கூட கலக்கத்தில் வைத்திருக்கும். அப்படி நடந்திருக்கலாம். அப்படி நடக்குமா?

“எல்லார் வாழ்க்கையும் ஆட்டிப்படைக்கும் கிரகங்கள், என்னதான் ஜோதிடராக இருந்தாலும், அவரும் மனிதர்தானே, அவரை ஆட்டிப்படைக்க எத்தனை நேரம் ஆகும்?’’ எனவேதான் பலன் சொல்லும் பொழுது, நாம் சொல்கிறோம் என்று நினைக்காமல், நம் மூலமாக கிரகங்கள் பேசுகின்றன என்று நினைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும். நமக்கே குழப்பமாக இருக்கக்கூடிய விஷயங்களை சொல்லாமல் விட்டு விடுவதுதான் நல்லது. ஒரே மாதிரியான கிரகங்களின் பலன்கள் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமாகப் பேசும். லக்னாதிபதி எட்டாம் இடத்தில் நின்றால், என்ன நிலை? என்று சென்ற இதழில் கேட்டிருந்தோம்.

பொதுவாக சம்பந்தப்பட்ட ஜாதகர் உடல் மற்றும் மன நோயோடு இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆயுள் இருக்கும், ஆனால் குடும்பத்தைக் கவனிக்க முடியாது. மற்றவர்களுடைய அவதூறுகளை ஏற்கும் நிலையில் இருப்பார். சிலருக்கு வம்ச பரம்பரை இருக்காது. சிலருக்கு உடம்பில் அங்கஹீனம் இருக்கும். சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைத் தண்ட னையை அனுபவிப்பர். இப்படியெல்லாம் பொதுப் பலன்கள் சொல்லப் பட்டிருக்கும். ஆனால், இந்த பலன்கள் எல்லோருக்கும் நடக்குமா என்றால் நடக்காது. லக்னாதிபதி எட்டில் மறைந்து நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்கள் உண்டு.

உதாரணத்திற்கு ஒரு ஜாதகம் பார்ப்போம்.

மேஷ லக்னம். செவ்வாய் எட்டாம் இடத்தில் (விருச்சிகத்தில்) அமர்ந்தார். அமர்ந்த நட்சத்திரம் விசாகம் நாலாம் பாதம். ஜாதகத்தில் நட்சத்திரநாதன் குரு கடகத்தில் உச்சம் பெற்றிருந்தார். கடக, குரு எட்டாம் இடத்தில் உள்ள செவ்வாயையும் பார்த்தார். இவருக்கு குரு தசை நடந்தபொழுது, சொத்துக்கள் கிடைத்தன. வராது என்று இவரே நினைத்த புதிய சொத்துக்களும் எதிர்பாக்காதபடி திடீர் அதிர்ஷ்டமாக (திடீர் அதிர்ஷ்டம் எட்டாம் இடம்) இவருக்குக் கிடைத்தது. எட்டாம் இடத்துக்கே உரிய சில சங்கடங்களும் உடல்நலக் குறைவுகளும் அவ்வப்பொழுது ஏற்பட்டாலும்கூட, லக்னாதிபதி ஆட்சி பெற்று, நட்சத்திரநாதன் குருவின் பார்வையில் அமர்ந்து குரு உச்சம் பெற்றதால், இவருக்கு அஷ்டமாதிபதியாக இருந்தாலும்கூட எந்தக் கெடுதலும் நடைபெறவில்லை. அதுவும் அவரே லக்கினாதிபதி அல்லவா.

ஆனால், இதே செவ்வாய், விருச்சிகத்தில் புதனுடைய நட்சத்திரமான கேட்டையிலோ, அல்லது சனியின் நட்சத்திரமான அனுஷத்திலோ அமர்ந்திருந்தால், இந்த நற்பலன் அவருக்குக் கிடைத்திருக்காது. அதனால் லக்கனாதிபதி எட்டில் அமர்வதால், எல்லாம் போய்விட்டது என்று புலம்பத் தேவையில்லை. லக்னாதிபதி ஒன்பதில் அமர்வது (பாக்கியத்தில் அமர்வது) அற்புதமானது. முதல் திரிகோணம் லக்கினம். மூன்றாவது திரிகோணம் ஒன்பது. ஒரு கோணாதிபதி இன்னொரு கோணத்தில் அமரும் பொழுது பலன்கள் சிறப்பாக இருக்கும். முன்னோர்களுடைய ஆசிர்வாதம் உண்டு. பெற்றோர்கள் அன்பு உண்டு. சத்தியத்தைக் கடைப் பிடிப்பார்கள், நல்ல புகழோடு, நல்ல விஷயங்களை அனுபவிக்கக் கூடிய வாய்ப்பு பெற்றிருப்பார்கள். ஆனால், ஒன்பதாம் இடத்தில் அமர்ந்தாலும், அவர் ஏதோ ஒரு விதத்தில் கெட்டுவிட்டால், தந்தையின் அன்பையும் இழக்க வேண்டியவராக இருப்பார்.

லக்னாதிபதி கர்மஸ்தானமாகிய பத்தாவது வீட்டில் அமர்ந்தால், அந்த தசாபுத்தி நடக்கும் பொழுது கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காரணம், அது கர்மஸ்தானம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதே நேரம் பதவி, உத்யோகம், வண்டி, வாகனம் முதலில் யோகங்களைத் தரும். லக்னாதிபதி லாபஸ்தானத்தில் அமர்ந்தால், அது நல்ல அமைப்பு. மூத்தோர் ஆதரவு கிடைக்கும். ஆயுள் அதிகரிக்கும். ஆனால், இந்த 11-ஆவது இடம் என்பது சில லக்கினங்களுக்கு பாதகஸ்தானமாகும். மேஷ லக்கினத்திற்கு லக்கினாதிபதி செவ்வாய் கும்பத்தில் அமரும் பொழுது, சில தீய பலன்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புண்டு. சர லக்கினங்களுக்கு இந்தப் பிரச்னை உண்டு. அதைவிட முக்கியம் 11ம் இடம் மாரகஸ்தானமும்கூட.

லக்னாதிபதி 12ல் இருந்தால்?

உடனே பலரும் தலையில் கை வைத்துக் கொள்வார்கள். அப்படியெல்லாம் பயப்படத் தேவை கிடையாது. 40 வயதிற்கு பிறகு, இவர்களில் பலரின் வழ்க்கை நன்றாகவே இருக்கிறது. ஒரு ஜாதகம். விருச்சிக லக்கினம். 12ல் செவ்வாய். ஜாதகருக்கு 80 வயது ஆகிறது. நல்ல ஆரோக்கியத்தோடு ஓரளவு வசதி யோடு இருக்கிறார். ஆனால், தேவையில்லாத செலவுகள் ஏதோ ஒரு விதத்தில் வந்து, பணம் கையை விட்டுப் போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால், ஒரு விஷயம்? விரயமாக வேண்டுமென்றால், வரவும் வேண்டும் அல்லவா. இவருக்கு வரவும் வருகிறது. விரயமும் ஆகிறது. கடன் இல்லாமல் இருக்கிறார். இப்படி பல ரகசியங்கள் ஜோதிடத்தில் இருக்கின்றன.

Tags : Lucknow ,
× RELATED சுக்ரீஸ்வரர் கோயில்