×

அதிர்ஷ்டத்தால் வெற்றியா? சுய முயற்சியால் வெற்றியா?

லக்னம், லக்னாதிபதி இரண்டும் சிறப்புடன் இருக்கும் ஜாதகங்கள் வெற்றி பெறும். மற்ற கிரக அமைப்புகள் சாதகமாக இல்லாவிட்டாலும் கூட, இந்த ஜாதகங்கள் உயிர் ஆற்றலோடும் சுய சிந்தனையோடும் இயங்கும்.

லக்னம், லக்னாதிபதி சிறப்பாக இருப்பது என்றால் என்ன பொருள்?

லக்னாதிபதி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அஷ்டமத்திலோ, விரய ஸ்தானத்திலோ கூட இருக்கலாம் தவறில்லை. ஆனால் அவர் எத்தகைய பலத்தோடு எந்தெந்த சுப கிரகங்களின் தொடர்போடு இருக்கிறார் என்பது முக்கியம். சுப பாவத் தொடர்புகளும் சுப கிரகத்தொடர்புகளும் அவரை வலிமைப்படுத்தும்.

உதாரணமாக, லக்னாதிபதி, ஐந்தாம் இடத்து அதிபதியுடனோ, ஒன்பதாம் இடத்து அதிபதியுடனோ அமர்ந்திருந்தால் அல்லது பார்வைத் தொடர்போடு இருந்தால் அல்லது அவர்களுடைய சாரம் பெற்றிருந்தால், லக்னாதிபதிக்கு வலிமை தரும். லக்னாதிபதியின் வலிமை அவர் எந்த இடத்தில் இருந்தாலும் அவரை நேர்மறையாக (positivity) இயங்க வைக்கும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், சில கிரக அமைப்புகள் ஜாதகருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். சில கிரக அமைப்புக்கள் ஜாதகர் தனக்குரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பினைத் தரும். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

ஒரு பெரிய பணக்காரர். அவருக்குப் பிள்ளையாக பிறப்பதால் கிடைக்கக்கூடிய வாய்ப்பு என்பது அதிர்ஷ்டம். லக்னாதிபதி நல்ல இடங்களில் அமையும் பொழுது இப்படிப்பட்ட அதிர்ஷ்டங்கள் அமையும்.

ஆனால் ஒருவருக்கு, லக்னாதிபதி வலுவோடு இருந்து, அதே சமயத்தில் அவருக்கு இப்படிப்பட்ட அதிர்ஷ்ட பாவங்களில் தொடர்பு இல்லாமல் இருந்தால் அவர் கெட்டு விட மாட்டார். தானாகவே சுய முயற்சியினால் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு முன்னேறி விடுவார்.

தாத்தா அதிகாரி, அம்மா மருத்துவர்,அப்பா பெரிய பதவியில் இருப்பவர் என்று பரம்பரையாக படித்து அதிகாரியாக தொழிலதிபர்களாக வருகின்றவர்களின் ஜாதகங்களையும், மிகச் சாதார ணமான குடும்பத்தில் பிறந்து, அடுக்கடுக்கான தொழில்களை ஏற்படுத்தி முன்னேறக் கூடிய நபர்களின் ஜாதகங்களையும் பாருங்கள்.

முதல் வகையில் யோக அமைப்புகள் பிரகாசமாக இருக்கும். இரண்டாவது வகையில், மற்ற கிரக அமைப்புகள் சாதகமாக இல்லாமல் இருந்தாலும் லக்னாதிபதி வலுவோடு இருப்பார்.

இன்னொரு விஷயமும் உண்டு. லக்னாதிபதி வலுவோடு இருந்தாலும் லக்னம் கெட்டுவிட்டால் அதுவும் தவறு. லக்ன பாவம் கெடுவது என்பது, லக்னத்துக்கு தீமை செய்யும் அமைப்பு. லக்னா திபதிக்கு பகை கிரகங்கள், அல்லது நீச கிரகங்கள் லக்னத்தில் அமர்வதால் லக்ன பாவம் கெட்டுவிடும்.

லக்னம், லக்னாதிபதியின் வெற்றி என்பது அது தொடர்பு கொள்ளும் பாவத்தைப் பொறுத்தது. லக்னாதிபதி எந்த பாவத்தில் அமர்ந்தால் எப்படி இயங்குவார் என்பதற்கு பொதுவான பலன் உண்டு.

இதை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று லக்னாதிபதி எந்தெந்த பாவத்தோடும் எந்தெந்த பாவாதி பதிகளோடும் அல்லது கிரகங்களோடும் தொடர்பு கொள்கிறார் என்பதை வைத்துக்கொண்டு சில விசயங்களைத் தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாவதாக, எந்தெந்த பாவாதிபதிகள் லக்னத்தோடு தொடர்பு கொள்ளுகிறார்கள். எந்தெந்த கிரகங்கள் லக்னத்தோடு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதில் ஏன் கிரகங்களைக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், ராகு கேதுவைத் தொடர்பு கொள்ளும் பொழுது, அவர்கள் எந்த ராசிக்கும் அதிபதியாக இல்லாத அமைப்பு இருப்பதால் ராகு கேது தொடர்புடைய விஷயத்தை சற்று எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

ஒரு கும்ப லக்கின ஜாதகம். லக்னாதிபதி சனி. அவர் எங்கு இருக்கிறார் என்பது லக்னாதிபதி தொடர்பு கொள்வது. உதாரணமாக 10ல் இருந்தால் 10ம் பாவத்தொடர்பு பெற்றிருப்பதாகப்பொருள்.

இதே கும்ப லக்கினத்தில் சூரியனும் புதனும் அமர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால். ஐந்து, எட்டாம் அதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து லக்னத்தில் அமர்ந்து இருக்கிறார்கள் என்று பொருள்.

முதலில் சொன்னது லக்னாதிபதி பெற்ற தொடர்பு.

இரண்டாவதாகச் சொன்னது லக்னம் பெற்ற தொடர்பு.

லக்னாதிபதி 11-ஆம் இடத்தில் குருவோடு அமர்ந்திருந்தால் 11-ஆம் இடத்தில் 11 ஆம் அதிபதியோடு அமர்ந்திருக்கிறார் என்கிற அடிப்படையில் லக்னாதிபதிக்கு 11 ம் பாவத் தொடர்பு கிடைக்கிறது.

ஒருவர் அனுபவிக்கக்கூடிய அல்லது அவருக்குக் கிடைக்கக் கூடிய விஷயங்களை லக்கினமும் லக்னாதிபதியும் சுட்டிக் காட்டுவதால், மேலே சொன்ன பாவத் தொடர்புகளைப் பொருத்திப் பார்த்துதான் பலன்களில் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

முதலில் லக்னாதிபதி எந்தெந்த பாவங்களில் அமர்ந்தால் என்னென்ன நடக்கும் என்பதைப் பொதுவாகப் பார்ப்போம்.

லக்னாதிபதி லக்கினத்தில் இருந்தால், மிகவும் பலம். பூரண ஆயுள் சொல்லலாம். ஆயுள் வரை நல்ல முறையில் சிரமமின்றி வாழும் யோகம் உண்டு. லக்னத்தில் நீசக்கிரகங்களோ, பகைக்கிரக ங்களோ இல்லாமல் இருப்பது இன்னும் நல்லது.

லக்னாதிபதி 2-வது வீட்டில் இருந்தால் வாக்கு வன்மையுடன், கல்வி, மன அமைதி பெற்றவனாகவும் நல்ல குடும்பஸ்தனாகவும் இருப்பான். செல்வமும், செல்வாக்கும் உள்ளவனுமாக இருப்பான். குடும்ப விருத்தி இருக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானம் பலமடைகிறது அல்லவா?

லக்னாதிபதி 3-வது வீட்டில் சுப பலத்தோடு இருக்க, சகோதர, சகோதரிகளுடன் கூடி வாழ்பவனாகவும், அந்தஸ்தைப் பெற்றவனாகவும் இருப்பான். அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் தேடி வரும்.

லக்னாதிபதி 4-வது வீட்டில் சுபமாக இருந்தால் நல்ல குடும்பம் உண்டு. வீடு, நிலபுலன், வண்டி வாகனம் உண்டு. தாயிடம் அன்புள்ளவனுமாகவும், கல்வியில் உயர்ந்தவனுமாகவும் இருப்பான். லக்னாதிபதி 5-வது வீட்டில் சுப பலமாய் இருந்தால், குழந்தைகளால் ஆதரவும் மகிழ்ச்சியும் உண்டு. குல தெய்வ வழிபாடு பரோபகார சிந்தனை விசாலபுத்தி இருக்கும்.

லக்னத்துக்குடைய கிரகம் 6-வது வீட்டில் இருந்தால் கடன், வியாதி, பகை மூன்றும் ஏதாவது ஒரு விதத்தில் இருக்கும். லக்கினாதிபதி சுப பலம் பெறாதபோது. இந்தப் பலன்கள் கட்டாயம் நடக்கும்.

சில ஜாதகங்களில் லக்னாதிபதியே இரண்டு இடங்களுக்கும் (1,6,1,12,1,8) உரியவராக இருப்பார். உதாரணமாக விருச்சிக லக்னம். அதிபதி செவ்வாய். அவர் 6 க்கும் உடையவர். அவர் ஆறில் அமர்ந்து நல்லபடியாக இருந்தால் பகையை வெல்வார். பலகீனமாக இருந்தால் பகை தானாக அவரைத் தேடி வரும். அப்படி இல்லாவிட்டால் தனக்குத்தானே பகையாக இருப்பார். தான் செய்கிற செயல்களால் தானே கஷ்டப்படுவார். இதுவும் பல ஜாதகங்களில் நாம் பார்த்திருக்கலாம்.

லக்னத்துக்குடைய கிரகம் 7-வது வீட்டில் இருந்தால் பொதுவாக நல்ல பலனாகச் சொல்ல முடியாது. மனதில் தூய்மையான உண்மையான ஆசைகள் இருக்காது. தவறான ஆசைகளும் தவறான சிந்தனைகளும் ஏற்படும். எந்தத் தொழிலிலும் நிலையாக இருக்க மாட்டார்கள். சிலருக்கு திருமணத்திலும் தாமதம் ஏற்படும். திருமண உறவுகளிலும் சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். சுபச் சேர்க்கைகளோடு நல்லவிதமாக அமைந்தால் இந்தப் பலன்கள் தலைகீழாக மாறும். பொதுமக்களிடத்திலே நல்ல உறவு இருக்கும். நல்ல நண்பர்கள் இருப்பார்கள். கணவன் மனைவி உறவுகள் சிறப்பாக இருக்கும். தொழிலில் வெற்றி பெறுவார்கள். கஷ்டப்படாமல் சுக வாழ்வு வாழ்வார்கள். இப்படியும் பலன் மாறுவது உண்டு.

எனவே லக்கினாதிபதி நல்ல பாவத் தொடர்புகளோடு நல்ல விதமாக இருக்கிறாரா பலவீனமாக இருக்கிறாரா என்பதையும் பார்த்துக் கொண்டுதான் முடிவு செய்ய வேண்டும்.

லக்னத்துக்குடையவன் 8-வது வீட்டிலிருந்தால்…? பார்க்கலாம்.

Tags :
× RELATED உங்களது ராசி, நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் முருகன் கோயில்கள்