எக்காளம் என்ற இசைக் கருவி போலவே, பல வெற்றிகளை பெறும் அமைப்பாகவும் பொருளாதாரத்தில் பன்மடங்கு திறன் அமைப்பை உருவாக்குவது எக்காள யோகமாகும். எக்காளம் என்பது காற்றினால் ஊதக்கூடிய ஒரு இசைக் கருவியாகும். இந்தக் கருவி இரு வகையாக உள்ளது. ஒன்று நீண்டதாகவும் மற்றொன்று வளைந்து காணப்படும். மன்னர்கள் வாழ்ந்த காலத்தில், மன்னர் பகைவர்களை எதிர்த்து கடுமையாக போரிட்டு வெற்றி பெற்று நாட்டிற்குள் நுழையும் பொழுது ஆடிக்கொண்டே ஊதப்படும் இசைக்கருவி. இது இப்போது தென் மாவட்டங்களில் மட்டுமே வழக்கத்தில் உள்ளது. இதை ஊதுவது மிகவும் கடினமாக இருக்கும். அதுமட்டுமின்றி அக்காலத்தில் மன்னர்களின் செய்திகளை சொல்வதற்கும் தம்பட்டம் அடிப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டது. மிகவும் அரிதான கருவி. தென் மாவட்டங்களில் எகத்தாளம் என்ற சொல்லாற்று உண்டு. அந்த எகத்தாளம் கூட இந்த எக்காளம் என்ற சொல்லில் இருந்து மருவியதுதான். மேலும், கோயில்களில் நடக்கும் பெருவிழாக்களிலும் இந்த இசைக் கருவி முழக்கமிடுவதை பார்க்கலாம். எக்காளத்தை வாசிக்கும் பொழுது அனைவரும் இன்புறுவார்கள் அல்லது மனமானது புத்துணர்வு பெறுகிறது. அதுபோலவே, ஜோதிடத்தில் உள்ள எக்காள யோகமும் உங்களின் புகழை, முன்னேற்றத்தை பறை சாற்றுவதாக உள்ளது.
எக்காள யோகம் என்றால் என்ன?
ஜாதகத்தில் (4ம்) நான்காம் அதிபதியும் (10ம்) அதிபதியும் கேந்திரம் என்று சொல்லக் கூடிய லக்னம் (1ம்), நான்காம் (4ம்), ஏழாம் பாவகம் (7ம்), பத்தாம் பாவகம் (10ம்) இடத்தில் வலிமை பெற்று, இவை லக்னாதிபதியை பார்வையாலோ அல்லது சேர்க்கையாலோ தொடர்பு கொள்வது எக்காள யோகம் என்பதாகும். இவற்றில் லக்னாதிபதி உச்சம் பெற்று இருந்தாலும், நான்காம் (4ம்) அதிபதி, பத்தாம் அதிபதி (10ம்) யாரேனும் ஒருவர் உச்சம் பெற்ற அமைப்பில் இருந்தாலும் சிறப்பான பலன்களை தரவல்லது.
எக்காள யோகத்தின் உட்சிறப்புகள்…
பொதுவாகவே (4ம்) நான்காம் அதிபதியும் (10ம்) பத்தாம் அதிபதியும் இணைவது புதையல் யோகம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இதனுடன் லக்னாதிபதி இணைவது என்பது இந்த யோகத்தின் பலனை ஜாதகர் அனுபவிப்பதை குறித்து சொல்லப்படுகிறது. இந்த யோகத்தின் யோகப் பலன்கள் என்பது லக்னத்தை பொறுத்தும், லக்னாதிபதி வலிமையை பொறுத்தும்; மேலும், (4ம்) நான்காம் அதிபதி (10ம்) பத்தாம் அதிபதிகளின் வலிமை மற்றும் அந்த இரு கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பாக உள்ளதா, பகை பெற்று உள்ளதா இவ்விரு கிரகங்களும் லக்னாதிபதியுடன் இணையும் பொழுது அல்லது லக்னாதிபதியுடன் திருஷ்டி பெறும் பொழுது ஏற்படும் நட்பாக உள்ளதா என்பதை பொறுத்து மாறுபடும். மூன்று கிரகங்களும் நட்பாக இருக்கு மெனில் நற்பலன்கள் உண்டு. பகை பெற்று இருக்குமானால் பலன்களின் குறைவாக யோகம் உண்டாகும். இதில், நான்காம் (4ம்), பத்தாம் (10ம்) அதிபதிகளின் திசா, புத்திகள் ஏற்படுமாயின் இன்னும் சிறப்பாக இந்த யோகம் மேம்படும்.
எக்காள யோகத்தின் பலன்கள்…
* பெரும் பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் கூடும். தொழில் மற்றும் ஏற்கனவே செய்த முயற்சியின் பலனாக இந்த யோகம் ஏற்படும்.
* பூமி யோகம் உண்டாகும். மேலும், உங்கள் சுற்றத்தாரின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
* தொழில் மூலம் பெரும் தன வாய்ப்புகளும் முன்னேற்றமும் உண்டாகும். தொழில் ரீதியாக உங்களின் திட்டங்களும் சிந்தனைகளும் முன்னேற்றத்தில் புதிய வாய்ப்பினை உருவாக்கும்.
* சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் பெற்றவராக இருப்பார். சமூகத்தில் பெரிய முக்கியஸ்தர்களின் தொடர்புகள் உண்டாகும்.
* இது ஒரு சுப அமைப்பாக சொல்லப்பட்டாலும், அசுப கிரகங்கள் தொடர்பு பெற்றிருந்தால் அசுப பலன்களும் உண்டு.
* வாழ்வின் எந்த நிலையில் பிறந்திருந்தாலும் மேல் நிலையை நோக்கிப் பயணிக்கும் அமைப்புகள் உண்டாகும்.
* பெரிய அளவில் வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
* சிலர் பெரிய அளவில் பல வீடுகள் வாங்கி வாடகை மூலம் பொருள் ஈட்டும் அமைப்பை பெற்றவராக இருப்பர்.
லக்னத்தின் அடிப்படையில் எக்காள யோகம்…
மேஷம் – சந்திரன் மற்றும் சனி கேந்திரங்களான 4ம் இடம், 10ம் இடத்தில் அமர்ந்து 10ல் உள்ள கிரகத்துடன் செவ்வாய் இணைவது.
ரிஷபம் – சூரியன் மற்றும் சனி கேந்திரத்தில் இணைவது இவற்றுடன் சுக்கிரன் தொடர்பு பெறுவது.
மிதுனம் / மீனம் / தனுசு – புதன் மற்றும் குருவுடன் கேந்திரத்தில் இணைவது எக்காள யோகம்.
கடகம் – சுக்கிரன் மற்றும் செவ்வாய் கேந்திரத்தில் இணைந்து இவற்றுடன் சந்திரன் பலம் பெறும் அமைப்பாகும்.
சிம்மம் – செவ்வாய் மற்றும் சுக்கிரன் கேந்திரத்தில் இணைந்து சூரியனுடன் இணைவது சிறப்பான அமைப்பாகும்.
கன்னி – வியாழன் மற்றும் புதன் கேந்திரங்களில் இணைந்து பலம் பெறுவது பொருளாதாரத்தில் சிறப்பாக இருக்கும்.
துலாம் – சனி மற்றும் சந்திரன் கேந்திரத்தில் இணைந்து சுக்கிரன் சிறப்பாக இணைவதும் சிறப்பான யோக அமைப்பாகும்.
விருச்சிகம் – சனி மற்றும் சூரியன் கேந்திரங்களில் இணைந்து செவ்வாய் தொடர்பு பெற்றால் பெரிய முன்னேற்றம் உண்டு. ஆனால், எச்சரிக்கை தேவை.
மகரம் / கும்பம் – செவ்வாய் மற்றும் சுக்கிரன் கேந்திரத்தில் இணைந்து சனியுடன் இணைவது சிறப்பான அமைப்பாகும்.
