×

குலதெய்வம் தெரியாதவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

?வில்வ மரம், விளாமரம் இரண்டும் ஒன்றுதானா?
– பாலசுப்ரமணியன், தூத்துக்குடி.

இல்லை. இரண்டும் வேறு வேறு தாவர வகையைச் சார்ந்த மரங்கள். வில்வ மரத்தின் இலைகள் ஆன்மிகத்தோடு தொடர்பு உடையது, குறிப்பாக சிவ வழிபாட்டிற்கு உகந்தது. பெரும்பாலும் மூன்று இதழ்களைக் கொண்டதாக இருக்கும். ஒரு சில இடங்களில் ஐந்து இதழ்கள், ஏழு இதழ்களைக் கொண்ட வில்வ மரங்களையும் காண இயலும். விளாமரத்தின் இலைகள் சற்று பெரியதாக இருக்கும். விளாம்பழம் என்பது கெட்டியான ஓடுடன் சற்று கடினமானதாக இருக்கும். இது விநாயகர் சதுர்த்தி பூஜையில் முக்கிய இடத்தினைப் பிடிக்கிறது.

?மறுபிறவி உண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதா?
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

நிச்சயமாக. புனரபி ஜனனம், புனரபி மரணம் என்பதே நமது அடிப்படை சித்தாந்தம். மனிதன் கடந்த ஜென்மத்தில் தான் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையிலேயே இந்த ஜென்மாவில் பலனை அனுபவிக்கிறான் என்பதையே பல நூல்களும் வலியுறுத்திச் சொல்கின்றன. ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து என்று கல்வி எனும் அதிகாரத்தில் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். அதாவது ஒரு பிறவியில் தான் கற்ற கல்வி ஆனது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாது அவனுக்கு ஏழு பிறப்பிலும் கூடவே சென்று உதவும் என்பதே அக்குறளின் பொருள். அப்படி என்றால் மறுபிறவி உண்டு என்ற கூற்றினை திருவள்ளுவரே வலியுறுத்திச் சொல்லி இருக்கிறார் எனும்போது மறுபிறவி குறித்த சந்தேகமே வேண்டாமே.

?நவகிரகங்களை வழிபடும்போது ஏழு முறை இடமிருந்து வலமாகவும் இரண்டு முறை வலமிருந்து இடமாகவும் சிலர் சுற்றுகிறார்கள். இது சரியா?
– ம. தேவகி, கோவை.

சரியில்லை. இது முற்றிலும் தவறானது. நவக்கிரகங்களில் ராகு, கேது இருவரும் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார்கள் (தலைகீழாக சுற்றுகிறார்கள்) என்பதால் ஏழுமுறை இடமிருந்து வலமாகவும், 2 முறை வலமிருந்து இடமாகவும் அதாவது தலைகீழாக சுற்ற வேண்டும் என்று காரணத்தையும் சொல்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. ஒரு குறிப்பிட்ட காலத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகிய கிரகங்கள் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் சேர்த்து எத்தனை கிரஹங்கள் வக்ரமோ அத்தனை சுற்றுகளை தலைகீழாக சுற்ற வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது அல்லவா? முதலில் அறிவியல் ரீதியான ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். வக்ரம் என்றால் எந்த ஒரு கோளும் பின்நோக்கிச் செல்வதில்லை. சூரியனைச் சுற்றி அனைத்து கோள்களுமே தனித் தனியாக அவரவருக்கு உரிய நீள்வட்டப் பாதையில் நேராகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு நீள்வட்டப் பாதையில் பயணிக்கும்போது ஒரு சில நேரங்களில் அவற்றின் வேகம் குறைகிறது. அவ்வாறு வேகம் குறையும் நேரத்தில் நம் கண்களுக்கு அவை பின்நோக்கிச் செல்வது போல் தோன்றுகிறது. உங்களுக்கு எளிதில் புரியும்படியாகச் சொல்லவேண்டும் என்றால் அருகருகே இரு இரயில் வண்டிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போது ஒரு வண்டியின் வேகம் குறைந்தால், வேகமாகச் செல்லும் வண்டியில் பயணிப்போரின் கண்களுக்கு அருகில் உள்ள வண்டி பின்நோக்கிச் செல்வது போல் தோன்றுகிறது அல்லவா. அதுபோலத்தான் இதுவும். இவ்வாறு கிரஹங்கள் சுற்றுகின்றபோது அவற்றின் வேகம் குறைகின்ற காலத்தையே வக்ர கதி என்று குறிப்பிடுகிறார்கள். மாறாக நீங்கள் நினைப்பது போல எந்த ஒரு கிரகமும் பின்நோக்கிச் செல்வது இல்லை. பூமியில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் நம் கண்களுக்கு வக்ர கதியில் உள்ள கிரஹங்கள் பின்நோக்கிச் செல்வது போல் தெரிகிறது. அவ்வளவுதான். எந்த ஒரு கோளும் பின்நோக்கி செல்லவே செல்லாது.

ராகு-கேதுக்களைப் பொறுத்த வரை அவைகள் உண்மையான கோள்கள் இல்லை. அவைகள் இரண்டும் வெட்டும் புள்ளிகள். இந்த வெட்டும் புள்ளிகள் ஒரே இடத்தில் நிலைகொண்டு இருப்பதால் பூமியில் முன்நோக்கி பயணிக்கும் நம் கண்களுக்கு அவைகள் பின்நோக்கிச் செல்வது போல் தெரிகிறது. அதற்காக ராகு&கேதுக்களை வணங்க நாமும் பின்நோக்கிச் சுற்றுவது என்பது முற்றிலும் மூடநம்பிக்கையே ஆகும். அதோடு மட்டுமல்லாது சுற்றி வந்து வணங்குவது என்பது நமது இயற்கையோடு கலந்த ஒரு நடைமுறை. பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பதைப் படிக்கிறோம். அதே போல நாமும் இறைசக்திகளை சுற்றி வந்து வணங்குகிறோம், அதோடு நில்லாது இருந்த இடத்திலிருந்தே தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் வணங்குகிறோம். இது அனைத்தும் இடமிருந்து வலமாகவே அமைகிறது. ஏனெனில் இந்த பூமியும் இடமிருந்து வலமாகவே சூரியனைச் சுற்றுவதோடு தன்னைத்தானும் சுற்றிக் கொள்கிறது. எவ்வாறு இந்த பூமியானது வலமிருந்து இடமாகச் சுற்றுவது இல்லையோ, அதே போல நாமும் வலமிருந்து இடமாக இறைசக்திகளைச் சுற்றக்கூடாது. அவ்வாறு சுற்றினால் அது இயற்கைக்கு மாறான ஒரு செயல். அதனால் உடலுக்கு நோய்தான் வருமே தவிர நன்மைகள் விளையாது. நவக்கிரகங்கள் எண்ணிக்கையில் ஒன்பது என்பதற்காக ஒன்பது சுற்றுதான் சுற்றவேண்டும் என்ற கருத்தே தவறானது. ஏன் ஒன்பது சுற்றுகளுக்கு மேல் சுற்றினால் நவக்கிரகங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்களா என்ன.? நம்மால் எத்தனை சுற்று சுற்ற இயலுமோ அத்தனை முறை சுற்றினால் போதும். ஒரே ஒருமுறை சுற்றினாலும் சிரத்தையோடு சுற்ற வேண்டும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு சுற்றுகளின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் இறைசக்திகளின் மேல் உங்களது கவனத்தை செலுத்தி இடமிருந்து வலமாக சுற்றி வந்து வணங்குங்கள். வளம் பெறுவீர்கள்.

?கலைஞர்கள் எந்தக் கடவுளை பூஜித்து வணங்கினால் மேன்மையை அடையமுடியும்?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ஆயக்கலைகள் அறுபத்திநான்கிற்கும் அதிபதி கலைமகள் என்பதால் கலைஞர்கள் சாட்சாத் சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். நடனக் கலைஞர்கள் நடராஜப் பெருமானையும், தாள வாத்தியக் கலைஞர்கள் நந்தியம்பெருமானையும், தந்தி (கம்பி) இசைக் கலைஞர்கள் நாரத மகரிஷியையும், நாபிக்கமலத்திலிருந்து நாதத்தினை எழுப்பி காற்றின் வாயிலாக இசைக்கப்படும் குழலிசைக் கலைஞர்கள் ஸ்ரீகிருஷ்ணரையும் வாய்ப்பாட்டு கலைஞர்கள் கலைவாணியையும் வணங்குவது வழக்கத்தில் உள்ளது.

?கும்ப மேளா எனும் திருவிழா கோயில் களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவது ஏன்?
– ஜெ. மணிகண்டன், வேலூர்.

கும்பமேளா எனப்படுவது ஆலயத்தில் நடத்தப்படும் திருவிழா அல்ல. புண்ணிய தீர்த்தங்களில் நடைபெறும் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வானது சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஆகிய கும்ப மாதம் என்றழைக்கப்படும் மாசி மாதத்தில் நடைபெறுவதால் இதனை கும்ப மேளா என்று அழைக்கிறார்கள். இதுபோக நவகிரகங்களில் உள்ள குரு ஒரு ராசியில் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிப்பார். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அவர் ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்கு 12 ஆண்டுகள் ஆகிறது. இப்படி குருவின் சஞ்சார அடிப்படையில் கும்ப மேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

?ஆன்மிக சுற்றுலா சென்று பல்வேறு இறை வழிபாடுகளைச் செய்வது முழுமையான பலனைத் தருமா?
– டி. நரசிம்மராஜ், மதுரை.

புனிதப் பயணத்தை எல்லோரும் வாழ்வில் ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும் என்று நம்முடைய தர்மமானது வலியுறுத்துகிறது. ஆன்மிக சுற்றுலாக்கள் என்பது அலைபாயும் மனதிற்கு ஆறுதலையும் நிம்மதியையும் தருகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் நமக்குள்ளாகவே உறையும் இறைவனை உணர்வதோடு தம்மைச் சுற்றி இருப்பவர்களிடமும் அனைத்து ஜீவராசிகளிடமும் உண்மையான அன்பினை செலுத்துபவர்களுக்கு மட்டுமே வழிபாடுகள் என்பது முழுமையான பலனைத் தரும்.

?பரம்பரை நோய் இருக்கிறது என்று கூறுகிறார்களே, உண்மையா?
– வண்ணை கணேசன், சென்னை.

உண்மைதானே. சர்க்கரை வியாதி போன்றவை பரம்பரையாக வருவதை மருத்துவர்களும் ஒப்புக் கொள்கிறார்களே. ஜோதிடவியல் ரீதியாக மரபணுக்களை கடத்தும் கிரஹங்களாக ராகு&கேதுக்களைச் சொல்வார்கள். இந்த ராகு மற்றும் கேதுவின் சஞ்சார நிலையே பரம்பரை வியாதிகளைத் தருகிறது என்பதை ஜோதிடமும் வலியுறுத்துகிறது. ஆக பரம்பரை வியாதி என்பது உண்மையே. அதே நேரத்தில் எல்லா வியாதிகளும் பரம்பரை வியாதிகள் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

?பொதுவாக கோபுர கலசத்திற்குள் என்னென்ன பொருட்கள் வைக்கப் படுகிறது?
– என். இளங்கோவன், மயிலாடுதுறை.

பொதுவாக கோபுர கலசத்திற்குள் வரகு தானியத்தை நிரப்பி வைத்திருப்பார்கள். ஒரு சிலர் விதை நெல்மணிகளை நிரப்பி வைக்கிறார்கள். இதுபோன்ற தானியங்களைத் தவிர வேறு எந்த பொருளையும் கோபுர கலசத்திற்குள் வைப்பதில்லை.

?60 வயதிற்கு மேல் உள்ளவர்களை சனி திசை பாதிக்காதா?
– சு. ஆறுமுகம், கழுகுமலை.

முதலில் சனி திசை என்றாலே பாதிப்பினைத் தரும் என்ற கருத்தே தவறானது. சனி திசை காலத்தில் அளப்பறிய நற்பலன்களை அடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எந்த வயதினராக இருந்தாலும் ஜாதகத்தில் நடக்கும் தசாபுக்திகளின் அடிப்படையில்தான் பலன் என்பது நடக்கிறது. இதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

?இறைவனை உணர எளிய வழி?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

அன்பே சிவம், தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை, குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும் என நம்மவர்கள் பல எளிய வழிகளை சொல்லித் தந்திருக்கிறார்களே, இவற்றைப் பின்பற்றினாலே இறைவனை எளிதாக உணர இயலுமே. இந்த வழிகளை சரிவரப் பின்பற்றி வந்தாலே உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்பதையும் உணர்ந்துவிடுவோம்.

?குலதெய்வம் தெரியாதவர்கள் செய்ய வேண்டியவை என்ன?
– த.நேரு, வெண்கரும்பூர்.

முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டின் பூஜை அறையில் வைத்து தினந்தோறும் வழிபட்டு வர வேண்டும். நம் எல்லோருடைய உடம்பிலும் அவரவர் குலதெய்வத்தின் அம்சம் என்பதும் இடம் பெற்றிருக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள் தினந்தோறும் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து முகம் பார்க்கும் கண்ணாடியை குலதெய்வமாக நினைத்து அதிலே தம் முகம் கண்டு வணங்கி வர ஒரு வருட காலத்திற்குள் குலதெய்வம் எது என்பதை அறிந்துகொள்வார்கள்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும்.ஏன் எதற்கு எப்படி? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை – 600 004.

Tags : Balasubramanian ,
× RELATED அம்மி மிதித்தல்