வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், வாழ்க்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? அது எளிதானகாரியம் இல்லை.
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. நீங்கள் எத்தனை அறிவாளியாக இருந்தாலும் உங்கள் அறிவைக்கொண்டு வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ள முடியாது.
அப்படியானால் வாழ்க்கையை எப்படித்தான் வாழ்வது என்கிற ஒரு கேள்வி எழும் அல்லவா.
ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
நாம் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உள்ள காலத்தில் நம்மிடையே இருக்கும் நாள்கள், சந்திக்கும் நிகழ்ச்சிகள், பெறும் அனுபவங்கள் – இவைகளின் தொகுப்புதான் வாழ்க்கை என்கிறோம்.
ஆனால், இந்த அனுபவங்கள், சந்திப்புக்கள், மகிழ்ச்சியான தருணங்கள், கசப்பான நிகழ்வுகள், எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. ஒரு சந்தோஷமோ துக்கமோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது.
நான்கு மசால் தோசை வாங்கி நான்கு பேருக்குப் பரிமாறிவிட்டு அனுபவத்தைக் கேட்டால் நான்கு பேரும் நான்கு விதமான அனுபவத்தைச் சொல்லுவார்கள்.
உணவு என்னவோ ஒரே உணவுதான். ஆனால், அனுபவங்கள் வேறுபடுகின்றன. ஏன் மாறுபடுகின்றன? அதற்குப் பல காரணங்கள் உண்டு .
ஒருவன் பசி இல்லாமல் அந்த உணவை சாப்பிட்டு இருப்பான். ஒருவனுக்கு உடம்பில் ஏதோ ஒரு நோய் இருக்கும். நாக்கு சரியாக இருக்காது. இன்னொருவருக்கு கவனம் வேறு விதமாக இருக்கும். மனம் உணவில் இருக்காது. இன்னொருவன் மிகுந்த பசியோடு இருந்திருப்பான். மிகுந்த பசியோடு இருக்கிறவன் சாப்பிட்டுவிட்டு சொல்லும் அனுபவங்களும், நாக்கு சரி இல்லாதவன் (சுவை அறிய முடியாமல் சளி, காய்ச்சலில் இருப்பவன்) தோசையைச் சாப்பிட்டுவிட்டு சொல்லும் அனுபவங்களும் ஒரே மாதிரியாக இருக்காது.
பொருள் என்னவோ ஒரே பொருள் தான். ஆனால், அனுபவங்கள் வேறுவிதமாக இருக்கின்றன.
ஒரு வலியை (Pain) எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வலியும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான அனுபவத்தையும் உணர்ச்சியையும் தரும்.
ஒரு குறிப்பிட்ட நோய்க்காக மருத்துவமனை வரும் சிலரோடு பேசிப் பாருங்கள். நோய் என்னவோ ஒரே விதமான நோய்தான். ஆனால் அனுபவங்கள் வித்தியாசமாக இருக்கும்.
எனவே, வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் தொகுப்பாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆங்கிலக் கட்டுரை படித்தேன்.
அது மரணத் தருவாயில் இருந்து மீண்டவர்கள் சிலரின் அனுபவங்களை கேட்டு எழுதப்பட்ட கட்டுரைகள்.
அந்த அனுபவங்களில் ஒரு சில விஷயங்கள் பொதுவாக இருந்தாலும் ஒவ்வொருவர் அனுபவமும் வெவ்வேறு விதமாக இருந்தது. சில விஷயங்கள் நம்பும்படியாக இல்லாமலும் இருந்தது.
இந்த விஷயத்தை ஒருமுறை ஒரு நண்பரிடம் சொன்னபோது அவர் எனக்கு சொன்ன பதில் என் சிந்தனையைத் தூண்டியது.
‘‘இதோ பாருங்கள். இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஒரு மனிதனின் உடம்புக்குள் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. மனிதனின் மூளைக்குள் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. சில
விஷயங்கள் ஏன் வருகின்றது என்று மருத்துவர்களால்கூட சொல்ல முடியவில்லை. ஆகையினால், நீங்கள் நம்பும்படியாக இல்லை என்பதாலே, அந்த விஷயங்கள் நடந்திருக்கவே முடியாது என்று சொல்லக் கூடாது. உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
‘‘அப்படியானால் அந்த விஷயம் நடந்துதான் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டவுடன் நண்பர் சொன்னார்.
‘‘அது எப்படி எனக்குத் தெரியும். அது நடந்திருக்கலாம் நடக்காமல் இருந்திருக்கலாம். அது குறித்து, நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டியதில்லை. காரணம் நாம் அதைப்போன்ற ஒரு அனுபவத்தைப் பெறாதவர்கள். வேண்டுமானாலும் நீங்களும் மரணத் தருவாயில் இருந்து மீண்டு வந்து ஒரு கருத்தைச் சொல்லலாம். அப்பொழுதும் நான் சொல்லுவேன் உங்கள் அனுபவம் ஒரு மாதிரியாகவும் இன்னொருவர் அனுபவம் ஒரு மாதிரியாகவும் கூட இருந்திருக்கலாம்.”
ஆம் இதைத்தான் வாழ்க்கையின் ஒரு உன்னதமான விஷயமாக, சாராம்சமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவர் வாழ்க்கை அனுபவங்களும் வெவ்வேறு விதமானது.
இறைவன், ஆன்மிகம் என எல்லா விஷயத்துக்கும் இது பொருந்தும்.
இந்த அனுபவங்களைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லை.
வாழ்க்கையை நாம் முன்கூட்டியே புரிந்து கொள்ள முடியாது. காரணம் அது ஒரே மாதிரியான விஷயங்களால் அடங்கியது அல்ல. ஆனால், அந்த வாழ்க்கை நமக்கு சில விஷயங்களைச் சொல்லித் தந்து கொண்டே வருகிறது.
அதற்கு வாழ்க்கையை அதன் போக்கிலேயே கூர்ந்து கவனித்து, வரவேண்டும். அப்படிக் கூர்மையாக கவனித்தவர்கள்தான், தங்கள் அனுபவத்தை, யாருக்காவது பயன்படும் என்று, அப்படி கவனிக்கத் தெரியாத நமக்காக எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இது நமக்கு ஓரளவுக்கு உதவும். ஆனால், முழுமையானது அல்ல.
கவியரசு கண்ணதாசன் ஒரு அருமையான கவிதையை எழுதினார். கேள்வி – பதில் போல் அமைந்த அந்தக் கவிதை இன்றைக்கும் மேடைகளில் பெருமளவில் கையாளப்பட்டுவருகிறது.
அவர் சித்த புருஷன் அல்ல.. வாழ்க்கையை கூர்ந்து கவனித்தவர். குறைந்த வயதிலே அவர் பெற்ற வெவ்வேறு விதமான அனுபவங்கள், சில விஷயங்களை அவருக்கு சொல்லித் தந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
காரணம், இந்தக் கவிதை ஒரு சித்த புருஷர் எழுதிய கவிதையைப் போலவே சில செய்திகளை நமக்குச் சொல்லும்.
கவிதையை முடிக்கின்ற பொழுது, அற்புதமாக முடிப்பார். ஒவ்வொன்றையும் அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால், ஆண்டவனே நீ எதற்காக இருக்கிறாய் என்று கேள்வி கேட்பதாகவும், ஆண்டவன் காதோடு வந்து அனுபவம்தான் நான் என்று சொன்னதாகவும் முடியும்.
வாழ்வின் சாராம்சத்தை அற்புதமாகச் சொல்லும் அந்தக் கவிதை இது.
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தே தான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
