×

தமிழகத்திலுள்ள நவபிருந்தாவனம்!

பொதுவாக மழை பொழிவதற்கு முன்னரும், மழை பொழியும் போதும், மழைபொழிந்த பின்னரும் ஒருவித மண்வாசனையை நாம் உணர்ந்திருப்போம். ஆனால், வேலூர் அருகே உள்ள செண்பாக்கத்தில் ஆன்மிகம் கமழும் மண்வாசனை தெரிகிறது. அதற்கு “தட்சிண நவபிருந்தாவன’’ கோயில்தான் காரணம். செண்பாக்கம் கிராமமாக இருந்த போதிலும், இக்கோயிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். நமக்கும் இந்த கோயில் புதியதுதான். செண்பாக்கம் நவபிருந்தாவன கோயில் எங்கு உள்ளது என்று கேட்டவாறு கோயிலை அடைந்தோம்.

பழமையான கோயில்

இக்கோயிலை சுற்றிலும் கட்டடங்கள் மிக குறைவு. எங்கு பார்த்தாலும் மரங்கள், செடி – கொடிகள் என பசுமை சூழ்ந்து காணப்படுகிறது. காற்றுகள், சரசரவென வீசின. இதில், மனதில் உள்ள மாசுகள் சுத்தமடைந்தன. அதனை நம்மால் உணர முடிந்தது. கோயிலை ஒட்டி சத்தமில்லாது அமைதியாக பாலாறு பாய்ந்து ஓடுகிறது. சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில், 30 ஆண்டுகளுக்கு முன்பு சற்று பராமரிப்புகள் இன்றி காணப்பட்டது. அதன்பின், 1992-ஆம் ஆண்டு, மெல்லமெல்ல திருப்பணிகள் தொடங்கப்பட்டு, இன்று இக்கோயில் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியை பெற்றிருக்கிறது. தற்போதும்கூட சில திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கோயிலுக்கு இரண்டு நுழைவாயில் உள்ளது. ஒன்று ராஜகோபுரம் வழியாகவும் மற்றொன்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மருடன் கூடிய ஆர்ச் வழியாகவும் இக்கோயிலுக்குள் செல்லலாம்.

இரு நுழைவாயில்

முதலில், ராஜகோபுரத்தை பற்றி காண்போம். மூன்று நிலைமாடமும், மூன்று கலசங்களும் மட்டுமே கொண்ட சிறிய கோபுரமாக இருந்தாலும், அதனை பார்க்கும் போது அதன் பழமையும், தெய்வீகமும் உணரமுடிகிறது. அது போலவே, 1798-ம் ஆண்டில் உத்தராதி மடம் வழியில் வந்த மகான் ஸ்ரீ சத்யாதிராஜ தீர்த்தரின் காலத்தில், இந்த ராஜகோபுரமானது கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. மேலும், இக்கோபுரத்தின் சில இடங்களில் கற்பாறைகளாலும் இணைத்துக் கட்டப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதற்கு சான்றாக, சமீபத்தில் புதுப்பிக்கவேண்டி கோபுரத்தை ஆராய்ந்த போது, ஒரு இடத்தில்கூட விரிசல்ககளோ அல்லது பிளவுகளோ தென்படவே இல்லை. கிட்டதட்ட 12 அடிக்கும், கீழே மிக ஆழமான அஸ்திவாரமும், சில இடங்களில் கற்பாறைகளினால் கட்டப்பட்டதுமே இதற்கு காரணம் என கட்டட பொறியாளர் கூறியிருக்கிறார்.

அடாடா… அக்காலத்தில், எத்தகைய தொலைநோக்கு பார்வை! அதுமட்டுமா? சத்யாதிராஜதீர்த்தர் போன்ற மகான்களின் கருணையும், பகவானின் அருளும் இல்லையெனில் இவைகளெல்லாம் சாத்தியமில்லை என்பது புலப்படுகிறது. அதே போல், இன்னொரு நுழைவாயிலான கோபுரம் அருகில் இருக்கக்கூடிய ஆர்ச்சும் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. ஆர்ச் நடுவில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கிறார்.

பிற சந்நதிகள்

உள்ளே நுழைந்து இடது பக்கமாக சென்றால், அங்கு “கன்னிமூலை கணபதி’’ தனிச் சந்நதியில் அருள்கிறார். மிக எளிமையாக காட்சியளிக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இவரை வளம் வந்த பின், கோயிலின் இடது பக்கத்தில், மாஞ்சாலம்மன் அருள்பாலிக்கிறார். பலருக்கும் மாஞ்சாலம்மனை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மகான் ஸ்ரீ ராகவேந்திரசுவாமியின் மூலப்பிருந்தாவன இடமான “மந்திராலயத்தின்’’ காவல் தெய்வம்தான் மாஞ்சாலம்மன். மேலும், ராகவேந்திரர் ஜீவசமாதி ஆகும் சமயத்தில், மாஞ்சாலம்மனே நேரில் தோன்றி, ராகவேந்திரரை இங்கையே (மந்திராலயத்தில்) ஜீவசமாதி அடையச் செய்திருக்கிறார். பிரதி வெள்ளிக் கிழமை அன்று மாஞ்சாலம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கும். மனநோய் உள்ளவர்கள், இந்த அம்மனை வழிபட்டால், உடனே நிவர்த்தி ஆகிவிடும். மாஞ்சாலம்மன் அருகில், பல நாகர்கள் பிரதிஷ்டை ஆகியிருக்கிறார்கள். ஆகையால், கருடபஞ்சமி – நாகபஞ்சமி போன்ற தினங்களில், இவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்.

காற்றில் மிதந்த கல்

இவர்களையெல்லாம் சேவித்துவிட்டு வந்தோமேயானால், மிக முக்கிய இரு மகான்களின் மூலபிருந்தாவனத்தை நாம் தரிசிக்க முடியும். இவர்கள், ஸ்ரீ வியாசராஜ மடம் வழியில் வந்த மத்வ குருமார்கள். ஒருவரின் பெயர், ஸ்ரீ கம்பாலு ராமசந்திர தீர்த்தர், மற்றொருவர் ஸ்ரீ ஸ்ரீ பதி தீர்த்தர் ஆவார். மிகப் பெரிய பிருந்தாவனங்கள். பார்க்கப்பார்க்க மனம் பூரித்துப் போகிறது. ஸ்ரீ ஸ்ரீ பதி தீர்த்தரின் சீடர்தான் ஸ்ரீ கம்பாலு ராமசந்திர தீர்த்தர். இவ்விரு மகான்களுமே மிகப் பெரிய மகான்கள் ஆவார்கள். அதிலும், கம்பாலு ராமசந்திர தீர்த்தருக்கு தனி மகிமை ஒன்று அரங்கேறியுள்ளது. ஒரு முறை இவர் தியானத்தில் இருக்கும்போது, இவருக்கு வேண்டாதவர், இவரின் மீது பெரிய கல் ஒன்றை தலையில் வீசியுள்ளார். அந்த கல் அப்படியே தலையில் படாதவாறு, அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது. இந்த அதிசயத்தை கண்ட கல்வீசியவர், கம்பாலு ராமசந்திர தீர்த்தரின் முன்பாக நெடுஞ்சான் கிடையாக வீழ்ந்து வணங்கி, மன்னிப்பு கேட்டார். மகான் அல்லவா.. மன்னித்து அருளினார்.

காற்றினால் மிதந்துகொண்டிருந்த அந்தக் கல்லை எடுத்து, ஒரு அனுமனை உருவாக்கி, அதற்கு பூஜைகளை செய்யத்தொடங்கினார், கம்பாலு ராமசந்திர தீர்த்தர். காரணம், மத்வ சம்ரதாயத்தில், காற்றை வாயுபுத்திரனாக பார்க்கப்படுகிறது. ஆதலால், வாயு பகவானே.. தன்னை காப்பாற்றியுள்ளதால், அந்தக் கல்லை எடுத்து அனுமனை பிரதிஷ்டை செய்துவிட்டார். இன்றும், ஸ்ரீ கம்பாலு ராமசந்திர தீர்த்தரின் மூலபிருந்தாவனத்தின் மீது இந்தக் கல்லை காணலாம். அதில், அனுமனையும் காணலாம்.

பிடி சந்நியாசிகள்

இவர்களின் அருகிலேயே ஸ்ரீ கேசவ உடையரு, ஸ்ரீ கோவிந்த மாதவ உடையரு, ஸ்ரீ பூவராக உடையரு, ஸ்ரீ ரகுநாத உடையரு என நான்கு பிடி சந்நியாசிகளின் மூலபிருந்தாவனங்களையும் தரிசிக்க முடியும். எந்த மடத்திலும் வழிவராமல், தனியாக துறவறம் பூண்டு கொள்வதே பிடி சந்நியாசிக்கான பொருள். இவர்களை தரிசிக்க மனது ஆனந்தமடைகிறது. இவர்களை தரிசித்துவிட்டு, அருகில் இருக்கும் படிகள் வழியாக மேலே ஏறிச் சென்றால், அங்கு உத்தராதி மடம் வழியில் வந்த, ஸ்ரீ வித்யாபதி தீர்த்தர் மற்றும் ஸ்ரீ சத்யாதிராஜ தீர்த்தர் ஆகிய இரு மகான்களை காணலாம். இவர்கள் அருகில், வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்படாத தனி அனுமனையும் தரிசிக்கலாம். மிக பெரிய பழமைவாய்ந்த பிருந்தாவனங்கள் பார்த்துக் கொண்டே இருக்க தோன்றுகிறது.

ஆக, வியாசராஜ மடம் வழியில் வந்த இரண்டு பிருந்தாவனமும், பிடி சந்நியாசிகளின் நான்கு பிருந்தாவனங்களும், உத்தராதி மடம் வழிவந்த இரண்டு பிருந்தாவனமும், மேலும் ஒரு மூலபிருந்தாவனமும் (ஒரு மூல பிருந்தானம் எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. ஆனால், வரலாற்று சான்றுகள் மொத்தம் ஒன்பது பிருந்தாவனங்கள் என்று குறிப்பிடுகின்றன) ஆக, ஒன்பது மூலபிருந்தாவனங்களும் ஒருமித்து சங்கமித்துள்ளதால், இவ்விடத்திற்கு “தட்சிண நவபிருந்தாவனகோயில்’’ என்று பெயர். இதே போல், கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள ஆனேகுந்தி பகுதியில் “நவபிருந்தாவனங்கள்’’ இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராகவேந்திரர் தரிசித்த இடம்

கீழே இறங்கி வந்ததும், நேராக கோயிலின் நடுவில் இருக்கும் ஸ்ரீ ராகவேந்திரரின் மிருந்திகா பிருந்தாவனத்தை தரிசிக்கலாம். இவரின் மேலேயும் ஒரு அனுமன் காணப்படுகிறார். மேலும் ஸ்ரீ ராகவேந்திரர், இந்த செண்பாக்கத்தில் சுமார் 14 நாட்கள் வரை தங்கி, இங்குள்ள மூலபிருந்தாவனங்களைப் பூஜித்துள்ளதாக ஸ்ரீ மடம் தெரிவிக்கிறது. அதுமட்டுமா!

ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரின் பாதங்கள் ஸ்பரிசித்த இடமாக இக்கோயில் கருதப்படுகிறது. அதன் காரணமாகவே, ஒவ்வொரு மகான்களும் இங்கே மூலபிருந்தாவனமாக ஐக்கியமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு நேரெதிரில், ஸ்ரீ பவன்புத்ர அனுமன் வீற்றியிருக்கிறார். (இந்த அனுமனையும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்யவில்லை) ஆக மொத்தம், இந்த தட்சிண நவபிருந்தாவனகோயிலில், நான்கு அனுமனை தரிசிக்கலாம். இவைகளையெல்லாம் தரிசித்த பின், “நாங்கள் சென்று வருகிறோம்’’ என்று அர்ச்சகரிடத்தில் தெரிவித்தவுடன், “எங்கே செல்கிறீர்கள்? நீங்கள் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை தரிசிக்க வேண்டாமா?’’ என்று அர்ச்சகர் கேட்டவுடன், அதிர்ச்சியடைந்தோம்.

“அதுதான் தரிசித்துவிட்டோமே… இதோ ராகவேந்திரஸ்வாமியின் மேலே இருக்கிறாரே.. அவர்தானே?’’ என்று நாங்கள் கேட்டதும். இல்லை என்று பதில் வந்தது.

ஆம்..! ராகவேந்திரஸ்வாமி மிருத்திகாபிருந்தாவனம் மேலே இருப்பதுதான், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் என்று பலரும் நினைத்து, அவரை தரிசித்து செல்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.

தனியாக அனுமன் சந்நதி

இந்த “நவபிருந்தாவனம்’’ கோயில் அருகிலேயே தென்மேற்கு பகுதியில், பாலாறுக்கு மிகமிக அருகாமையில், இன்னொரு தனி அனுமன் சந்நதி உள்ளது. இவர் பெயர் பிரசன்ன ஆஞ்சநேயர். இவரைத்தான் மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். மிகப் பழமை வாய்ந்த கோயில் என்பதால், சற்று சிதிலமடைய தொடங்கியிருக்கிறது. இதனால், முழுமையாக சிதிலமடைவதற்குள், விரைவாக அதன் அருகிலேயே புதிய கோயில் ஒன்றை எழுப்பி, அங்கு ராமர் – சீதா – லட்சுமணரோடு வியாசராஜர் பிரதிஷ்டை செய்த பிரசன்ன ஆஞ்சநேயரையும் புனர்பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ஆக, இந்த அனுமனைதான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். பெயருக்கு ஏற்றால் போல், வேண்டுவோருக்கு உடனே பிரசன்னமாகி, குறைகளை தீர்த்து, வேண்டியதை உடனே வழங்குகிறார், பிரசன்ன ஆஞ்சநேயர்.

அதே போல், இவரை வேண்டிக் கொண்டு, காரிய ஜெயம் பெற, இதை செய்கிறேன் என்று ஏதாவதை வேண்டிக்கொண்டால், காரியம் ஜெயம் அடைந்தபின், அதை உடனே செய்ய வேண்டும்.

வேண்டிக் கொண்டதை செய்ய தவறிவிட்டாலோ அல்லது மறந்துவிட்டாலோ, வானரங்களை வீட்டிற்கு அனுப்பி, பிரார்த்தனைக் காணிக்கையை வசூல் செய்து கொள்வர் என, ஊர் மக்கள் கூறுகிறார்கள். ஆக, நவபிருந்தாவன கோயிலில் நான்கு அனுமன்களும், வெளிப்புறத்தில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஒரு அனுமனும், ஆகமொத்தம் ஐந்து அனுமன்கள் அருள்கிறார்கள். அனுமன் ஜெயந்தி அன்று நினைத்துப் பாருங்கள் எப்படி இருக்கும் என்று!

இக்கோயிலின் தலவிருட்சம், வன்னிமரம் ஆகும். மகான்களின் ஜெயந்தி, ஆராதனை ஆகிய தினங்கள் வரும்போது, மத்வசம்ரதாய பீடாதிபதிகள் இங்கு வருகைதந்து, சிறப்பு செய்வார்கள். இந்த செண்பாக்கம் நவபிருந்தாவன கோயிலையும், வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனையும் விட்டு வர மனமில்லாமல், சற்று நேரம் நாம் அங்கும் இங்குமாக சுற்றிக்கொண்டே இருந்தோம். இன்றும்கூட நம் மனம் செண்பாக்கம் நவபிருந்தாவன கோயிலையே நினைத்துக் கொண்டிருக்கிறது!

எப்படி செல்வது?: வேலூரில் இருந்து செண்பாக்கம் நவபிருந்தாவன கோயில் வெறும் மூன்று கிலோ மீட்டர்தான். வேலூரில் இருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவை இக்கோயிலுக்கு செல்கின்றன. கோயில் தொடர்புக்கு: 9486103950.

Tags : Navabirundhavanam ,Tamil Nadu ,Vellore ,Dakhshina Navabirundthavana ,Senpakkam ,
× RELATED சுக்ரீஸ்வரர் கோயில்