×

மீண்டும் வருவார் விஷ்ணுதீர்த்தர்!

21 மகான்

கர்நாடக மாநிலம், ஹூப்ளி அருகில் இருக்கும் சோதே என்னும் இடத்தில் “சோதே மடம்’’ உள்ளது. இங்கு ஸ்ரீ வாதிராஜதீர்த்தரின் மூலபிருந்தாவனம் இருக்கிறது. வாதிராஜரால் சோதே மடம் உருவாகியிருந்தாலும், இவருக்கு முன்னர், 19 மகான்கள் பீடத்தை அலங்கரித்துள்ளனர். அவர்களில் முதன்மையானவர், “ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர்’’. (இவரின் பூர்வாஸ்ரம பெயர் குறிப்பில் இல்லாததால், இவரை விஷ்ணுதீர்த்தர் என்னும் பெயரிலே பார்ப்போம்) இவரை பற்றி பல தகவல்கள் இருக்கின்றன வாருங்கள் செல்வோம்!

பெற்றோரை ஒப்படைத்து செல்கிறார்

முதலில், ஒரு ஆச்சரியத்தை உடைத்துவிடுகிறேன். அது என்னவென்றால், ஸ்ரீ மத் மத்வாச்சாரியாரின் கூடப்பிறந்த தம்பிதான், விஷ்ணுதீர்த்தர்! தனது தம்பியின் வேதாந்த அறிவை நன்கு உணர்ந்திருந்தார் மத்வர். ஆகையால், மேலும் பல துவைத தத்துவங்களை தனது தம்பிக்கும் போதித்தார். விஷ்ணுதீர்த்தரும்கூட மத்வரின் நேரடி சீடர்தான் என்று சோதே மடம் தெரிவிக்கிறது. மேலும், பெற்றோரின் சொல்லை தட்டாதவராகவும், பெற்றோருக்கு சேவை செய்பவராகவும் இருந்திருக்கிறார்.

இது மத்வருக்கு பிடித்துப் போக, தன் தம்பியின் மீது அலாதி அன்பும், பாசமும் மத்வர் கொண்டிருந்தார். இதன் காரணமாக, மிக துணிச்சலோடு, தம்பி விஷ்ணுதீர்த்தர் இருக்கும் தைரியத்தில், பெற்றோரை தம்பியிடத்தில் ஒப்படைத்துவிட்டு, தான் இன்னும் பல வேதாந்தத்தை கற்பதற்காகவும், “பிரம்ம சூத்திரத்திற்கு பாஷைகளை எழுதுவதற்காகவும் “விஷ்ணுமங்கலம்’’ என்னும் இடத்திற்கு மத்வர் சென்றுவிடுகிறார்.

அதன் பிறகு, பெற்றோருக்கு விஷ்ணுதீர்த்தர்தான் எல்லாம். சில காலத்திற்கு பின், வயது மூப்பு காரணமாக பெற்றோர்கள் மரணிக்க, விஷ்ணுதீர்த்தர் மத்வரை தேடி விஷ்ணுமங்கலத்திற்கு செல்கிறார். அங்குதான் மத்வரின் சீடராக மாறுகிறார். மத்வருக்கு அனைத்து பணிவிடைகளையும் விஷ்ணுதீர்த்தர் செய்கிறார். அதன் பின், தானும் சந்நியாசம் பெறவேண்டும் என்கின்ற தன் விருப்பத்தை மத்வரிடத்தில் தெரிவிக்க, மத்வருக்கும் அதே எண்ணம்தான் உள்ளத்தில் இருந்தது. ஆனால், அந்த சமயம் சாதுர்மாதம் காலம் என்பதால், விஷ்ணுதீர்த்தருக்கு உடனடியாக சந்நியாசம் கொடுக்கப்படவில்லை.

மாய சக்திகள்

ஆகையால், சாதுர்மாதம் காலம் முடியும் வரையில், விஷ்ணுதீர்த்தரை காக்கும் படி கேட்டுக் கொண்டார். மேலும், அவரை மீண்டும் பாஜக சேத்திரத்திற்கு திரும்பிச் செல்லும்படி உத்தரவிட்டார். (பாஜக சேத்திரம் என்பது உடுப்பி அருகே உள்ளது) விஷ்ணுதீர்த்தரும், தன் அண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க, பாஜக சேத்திரத்திற்கு திரும்பிவிட்டார். வனவாசம் சென்ற ராமன், மீண்டும் அயோத்திக்கு எப்போது வருவாரோ… என்று காத்துக்கிடந்த பரதனை போல், உணவு, ஓய்வு ஆகியவைகளை மறந்து, மத்வரின் வருகைக்காக விஷ்ணுதீர்த்தர் மிகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார். மத்வர் வந்ததும், விஷ்ணுதீர்த்தருக்கு சந்நியாசம் கொடுத்தார்.

விஷ்ணுதீர்த்தர், சிறந்த சொற்பொழிவாளராகவும், ஆன்மிக சக்தியையும் பெற்றிருந்தார். அதுமட்டுமா.. “ஹரிச்சந்திர’’ என்னும் மலைக்கு சென்று, அங்கு கடுமையான ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக, தனித்துவமான “மாய சக்திகளை’’ (unique mystic powers) பெற்றிருந்தார்.

கடும் உணவு கட்டுப்பாடுகள்

மேலும், வழக்கமான உணவை தவிர்த்து, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உணவருந்தி, இடைப்பட்ட நாட்களில் வெறும் பஞ்சகவ்யத்தை மட்டும் உட்கொண்டு, கடுமையான விரத முறைகளை விஷ்ணுதீர்த்தர் கடைபிடித்துள்ளார். பின்னர் அவைகளையும் கைவிட்டு, ஒரு சில உலர்ந்த இலைகள் மற்றும் சிறிய அளவிளான தண்ணீரை மட்டுமே பருகி கிருஷ்ணனை தியானித்து, அருள் பெற்றவராக உருவெடுத்தார். இத்தகைய விரத முறைகளை, இது வரையில் யாரும் கடைபிடித்ததில்லை என்று கூறப்படுகிறது. இத்தகைய விஷ்ணு தீர்த்தரின் பக்தியைக்கண்டு, தேவர்களே வியந்துபோனார்களாம்.

“சம்ந்யாசபத்ததி’’ (Samnyasapaddhati), “ஷ்ரவணத்வாதசிநிர்ணய’’ (Shravanadwadashinirnaya), “விஷ்ணுபஞ்சகநிர்ணய’’ (Vishnupanchakanirnaya), “பஞ்சசம்ஸ்காரசங்கரஹா’’ (Panchasamskarasangraha) போன்ற பல முக்கிய நூல்களை எழுதியுள்ளார். மேலும், விஷ்ணுதீர்த்தருக்கு வியாசதீர்த்தர், அனிருத்ததீர்த்தர் என்னும் இரண்டு முக்கிய சீடர்கள் அவரிடத்தில் பாடங்களை கற்றுவந்தார்கள்.

காட்சிக்கொடுத்த ஹயக்ரீவர்

பின்னாட்களில், இந்த இரு சீடர்களுக்கும் சந்நியாசம் கொடுக்கப்பட்டு, ஸ்ரீ வியாசதீர்த்தர் சோதே மடத்தையும், ஸ்ரீ அனிருத்த தீர்த்தர் சுப்ரமணிய மடத்தையும் நிர்ணயம் செய்கிறார்கள். அதன் பிறகே இவ்விரு மடங்களும் மளமளவென வளர்கின்றன. ஸ்ரீ விஷ்ணுதீர்த்தருக்கு, பூவராஹ விக்ரகம் கொடுத்து மத்வர், ஆசீர்வதித்தார். அதனை தன் சீடர்களுக்கு வழங்கி, விஷ்ணுதீர்த்தர் அனுக்கிரகம் புரிந்தார்.

பகவான் ஹயக்ரீவரின் மீது பக்தியும், உபாசனையும் கொண்டவர், விஷ்ணுதீர்த்தர். பல முறை ஹயக்ரீவர் இவருக்கு காட்சிக் கொடுத்து அருளியிருக்கிறார். அதே போல், இவர் வழியில் வந்த மகான் ஸ்ரீ வாதிராஜதீர்த்தரும், ஒரு முறை ஹரிச்சந்திரமலையில் தவம் செய்து கொண்டிருக்கும் போது, பகவான் ஸ்ரீ ஹயக்ரீவர் காட்சிக் கொடுத்திருக்கிறார். அப்போதில் இருந்து, சோதே வாதிராஜ மடத்தின் பரம்பரையில் வந்த அனைத்து மடாதிபதிகளாலும், இன்றும் பகவான் ஹயக்ரீவர் வழிபாடு முக்கியமானதாகும்.

மீண்டும் வரும் விஷ்ணுதீர்த்தர்

பல ஆவணங்களில் ஸ்ரீ விஷ்ணுதீர்த்தர், பூதவுடலைவிட்டு செல்லவில்லை என்றும், அவர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என்றும், குக்கே சுப்ரமணியத்திற்கு அருகிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையான குமாரமலையில், கடுமையான தவம் செய்து வருகிறார் என்பதையும் கூறுகிறது. மேலும், அந்த ஆவணத்தில் கூறியிருப்பதாவது, ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, மத்வரின் அறிவுறுத்தலின் பேரில், விஷ்ணுதீர்த்தர் குமாரமலையில் இருந்து கீழே இறங்கி வந்து, காடில் (Kadtil) என்ற இடத்தில், நிலத்தடியில் வைக்கப்பட்டுள்ள “சர்வமூலா கிரந்ததத்தை’’ (Sarvamoola grantha) மீண்டும் கண்டுபிடிப்பார் என்றும், துவைத சித்தாந்தத்தை முறையாக மீண்டும் ஸ்தாபித்து, விஷ்ணுதீர்த்தர் துவைதத்தை பரப்புவார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதே போல், புஷ்ய மாதத்தின் முழு நிலவு நாள், அதாவது பௌர்ணமி நாள் அன்று, விஷ்ணுதீர்த்தர் உயிருடன் குமாரமலையை அடைந்த நாளாக ஸ்ரீ சோதே வாதிராஜமடம் பதிவு செய்கிறது.

(மத்வ மகானின் பயணம் தொடரும்…)

ரா.ரெங்கராஜன்

Tags : Vishnuthritar ,SOTE MONASTERY ,SOTE, NEAR HUBLI, STATE OF MAKHAN KARNATAKA ,Sri Vathirajadeethar ,Sode ,Vathiraj ,Makhs ,
× RELATED உங்களது ராசி, நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் முருகன் கோயில்கள்