×

விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு 14ம் தேதி பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா

புதுடெல்லி: விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 14ஆம் தேதி சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்புகிறார். அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25ஆம் தேதி விண்வெளி சென்றனர். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26ஆம் தேதி மாலையில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கிட்டத்தட்ட 14 நாட்கள் பயணமாக சென்றுள்ள அவர்கள், விண்வெளி நிலையத்தில் இருந்தவாறு பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். அத்துடன் தங்கள் கடைசி பணி ஓய்வுநாளையும் எடுத்துக்கொண்டனர். தற்போது பூமிக்கு திரும்புவது குறித்த நாசாவின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக ஆக்சியம் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், ‘பூமியில் இருந்து 250 மைல்களுக்கு மேலே இருந்தவாறு விண்வெளி வீரர்கள் 60க்கு மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். ஏராளமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து, தங்கள் அன்பார்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள்’ என கூறப்பட்டு இருந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்த நாட்களில் 230க்கு மேற்பட்ட சூரிய உதயத்தை பார்த்துள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள், சுமார் 1 கோடி அதாவது 96.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்திருப்பதாகவும் ஆக்சியம் கூறியுள்ளது. மேலும் சுபான்ஷு சுக்லா வருகிற 14ஆம் தேதி பூமி திரும்புவார் என்று நாசா அறிவித்து உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து புறப்படும் அவர்களது விண்கலம், சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு கலிபோர்னியா கடற்கரைக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு 14ம் தேதி பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா appeared first on Dinakaran.

Tags : Subhanshu Shukla ,Earth ,New Delhi ,SpaceX ,Axiom ,
× RELATED 101வது பிறந்தநாள் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி