×

சபரிமலை, பத்மநாபசுவாமி கோயில் சிலைகளுக்கு குறி ரூ.1000 கோடி மதிப்புள்ள சிலைகளை கடத்த திட்டமிட்டார்களா? சென்னை சிலை கடத்தல் கும்பல் தலைவனிடம் 2 நாட்களாக விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் சிலைகளை மட்டுமல்லாமல் பத்மநாபசுவாமி கோயில் உள்பட ரூ. 1000 கோடி மதிப்புள்ள புராதனமான கோயில் சிலைகளை கடத்தி விற்பனை செய்ய சென்னையைச் சேர்ந்த கும்பல் திட்டமிட்டதாக சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு புராதன சிலைகளை கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் அவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தான் தனக்கு இந்த தகவல்களை தெரிவித்ததாக ரமேஷ் சென்னித்தலா போலீசிடம் கூறினார். தொடர்ந்து போலீசார் அந்த தொழிலதிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் சென்னையை சேர்ந்த டி. மணி என்ற புராதன சிலைகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளிக்கு சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அவர் போலீசிடம் கூறினார். டைமண்ட் மணி என்று அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் பாலமுருகன் என்றும், இவரது தலைமையிலான கும்பல் சபரிமலை மட்டுமில்லாமல் பத்மநாபசுவாமி கோயில் உள்பட ரூ. 1000 கோடி மதிப்புள்ள புராதன சிலைகளை கடத்தி விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் அவர் போலீசிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

2019-2020 காலகட்டத்தில் சபரிமலையில் இருந்து 4 பஞ்சலோக சிலைகளை இந்த கும்பல் கடத்தியுள்ளது. இதற்கு தேவசம் போர்டின் ஒரு உயரதிகாரிக்கு தொடர்பு உண்டு. இவருக்கு அந்தக் கும்பல் பெருமளவு பணம் கொடுத்துள்ளது. 2020ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி திருவனந்தபுரத்தில் வைத்து சிலை கடத்தல் கும்பல் இவருக்கு பணம் கொடுத்தது. அப்போது மணி என்ற பாலமுருகன், உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம் போர்டின் இந்த உயரதிகாரி ஆகியோர் மட்டுமே இருந்தனர். இவை அனைத்துமே எனக்கு நேரடியாகத் தெரியும் என்று இந்த தொழிலதிபர் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் கூறுவது உண்மைதானா என்பது குறித்து சபரிமலை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை சென்ற போலீசார் மணியிடம் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் போலீசுக்கு சில முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Sabarimala ,Padmanabhaswamy ,Thiruvananthapuram ,Chennai ,Special Investigation Team ,
× RELATED மைசூரு அரண்மனை அருகே சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி