×

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜ மேயர் வேட்பாளராக வி.வி. ராஜேஷ் அறிவிப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக பாஜ மாநில பொதுச் செயலாளர் வி.வி. ராஜேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 101 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் மரணமடைந்ததால் 100 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. 50 வார்டுகளில் பாஜவும், 29 வார்டுகளில் இடதுசாரி கூட்டணியும், 19 வார்டுகளில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெற்றது. 2 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பெரும்பான்மைக்கு 51 வார்டுகள் தேவையாகும். எனவே ஒரு சுயேட்சை வேட்பாளரின் ஆதரவை பெற்று திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்ற பாஜ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி கேரளாவிலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்றனர். மேயர்கள், நகரசபை தலைவர்கள் உள்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் முன்னாள் பெண் டிஜிபி லேகா அல்லது பாஜ மாநில பொதுச் செயலாளர் வி.வி. ராஜேஷ் மேயராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கொடுங்கானூர் வார்டில் வெற்றி பெற்ற வி.வி.ராஜேஷை மேயர் வேட்பாளராக பாஜ நேற்று அறிவித்தது.

பாஜவின் துணை மேயராக கருமம் வார்டில் வெற்றி பெற்ற ஆஷாநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜ திருவனந்தபுரம் மாவட்ட முன்னாள் தலைவரான வி.வி.ராஜேஷ், பாஜவின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா மாநில தலைவராகவும் இருந்தார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணி சார்பிலும் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர் பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4 மாநகராட்சியையும், இடதுசாரி கூட்டணி ஒரு மாநகராட்சியையும் கைப்பற்றியுள்ளது.

Tags : V.V. Rajesh ,BJP ,Thiruvananthapuram Corporation ,Thiruvananthapuram ,state general secretary ,
× RELATED மைசூரு அரண்மனை அருகே சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி