×

பிரதமர் மோடி, பாஜ, காங். தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

புதுடெல்லி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி, பாஜ தலைவர் நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் ஆகியோர் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று(டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். மோடி தன் எக்ஸ் பதிவில், “அனைவருக்கும் அமைதி, இரக்கம் மற்றும் நம்பிக்கை நிறைந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்” என தெரிவித்துள்ளார். டெல்லி கதீட்ரல் ஆலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பாஜ தேசிய தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா சிவில் லைன்ஸில் உள்ள கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய நட்டா, “மனிதகுலத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்த நாள் ஊக்கமளிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நினைவுகூர்ந்து, மனிதநேயத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவோம். இந்த கிறிஸ்துமஸ் தினம், மனிதநேய வளர்ச்சிக்காக அனைவரும் கைக்கோர்த்து செயல்பட உத்வேகத்தை அளிக்க வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் பதிவில், “கிறிஸ்துமஸின் மகிழ்ச்சியான தருணத்தில், மக்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் இந்த புனிதமாக திருவிழா, அன்பு, இரக்கம், மன்னிப்பு, அமைதி மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் காலத்தால் அழியாத மதிப்புகளை நிலைநிறுத்த நம்மை ஊக்குவிக்கிறது. இந்த ஆசிர்வதிக்கப்பட்ட சந்தர்ப்பம் மனிதாபிமான மற்றும் இணக்கமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான எங்கள் கூட்டு முயற்சியை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொண்டு வரட்டும்” என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்தநாள் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும். உங்கள் வாழ்க்கையை அன்பு மற்றும் இரக்கத்தால் நிரப்பட்டும்” என வாழ்த்து கூறி உள்ளார்.

Tags : Modi ,BJP ,Congress ,Christmas ,New Delhi ,Nadda ,Kharge ,Rahul ,Jesus Christ.… ,
× RELATED மைசூரு அரண்மனை அருகே சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி