திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் திரண்டனர். இதனால் சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 30ம்தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. 30ம்தேதி முதல் ஜன.8ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதிக்கு பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை அதிகளவு பக்தர்கள் திருமலையில் திரண்டர். கடுமையான குளிர் மற்றும் பனியை பொருட்படுத்தாமல் சாலையோரங்களில் முதியோர், குழந்தைகளுடன் பெண்கள் தஞ்சமடைந்தனர். நேற்று முன்தினம் கோயிலில் 73 ஆயிரத்து 524 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 29 ஆயிரத்து 989 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.88 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.
நேற்று காலை வைகுண்டம் காத்திருப்பு காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியது.
இதனால் காத்திருப்பு அறைக்கு அருகே உள்ள சிலாதோரணம் வரை சுமார் 3 கி.மீ. தூரம் பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் சுமார் 30 மணி நேரம் காத்திருந்த பிறகே ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிக்கும் என தெரிகிறது.
* அலிபிரி பூதேவி காம்ப்ளக்சில் கூட்ட நெரிசல்?
அலிபிரி பூதேவி காம்ப்ளக்சில் சர்வ தரிசன இலவச டோக்கன்கள் பெற காலை முதலே பக்தர்கள் காத்திருந்தனர். டோக்கன் கொடுக்க தொடங்கிய சில மணி நேரத்தில், ஒதுக்கீடு முடிந்தது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படும் சூழல் இருந்தது. உடனடியாக பணியில் இருந்த போலீசார் மற்றும் தேவஸ்தான பாதுகாப்பு பணியாளர்கள் உஷார்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முயன்றதை, தடியடி நடந்ததாக ஒரு சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் அலிபிரி சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
