×

101வது பிறந்தநாள் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள சதைவ் அடல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு முன்னாள் துணை தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன் சிங், பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் மற்றும் எம்பிக்கள், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “நாட்டு மக்களின் இதயங்களில் ஆழமான இடம்பிடித்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். வாஜ்பாய் தன் வாழ்நாள் முழுவதையும் நல்லாட்சிக்கும், நாட்டை கட்டமைக்கவும் அர்ப்பணித்தார். ஒரு சிறந்த பேச்சாளராகவும், உணர்வுப்பூர்வமான கவிஞராகவும் அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். அவரது ஆளுமை, பணி, தலைமைத்துவம் ஆகிய பண்புகள் நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து வழிகாட்டியாக விளங்கும்” என புகழாரம் சூட்டி உள்ளார்.

Tags : President ,Vajbai ,Birthday Memorial ,New Delhi ,Murmu ,Modi ,Vajpayee ,Sadaiv Atal Memorial ,Delhi ,
× RELATED மைசூரு அரண்மனை அருகே சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி