×

ஒடிசாவில் பாதுகாப்பு படை என்கவுன்டர் நக்சலைட் முன்னணி தலைவன் உட்பட 6 பேர் சுட்டு கொலை

புவனேஷ்வர்: ஒடிசா வன பகுதிகளில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் நக்சலைட் முன்னணி தலைவன் உட்பட 6 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கஞ்சம் மற்றும் கந்தமால் எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, ஒடிசா போலீசார்,ஒன்றிய பாதுகாப்புப் படைகளான சிஆர்பிஎப், பிஎஸ்எப்-ஐ சேர்ந்த வீரர்கள் தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் நேற்று முக்கிய நக்சலைட் தலைவன் கணேஷ் உய்கே, உட்பட4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நக்சலைட்டு தலைவன் கணேஷ் உய்கேவின் தலைக்கு ரூ.1.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கொல்லப்பட்ட 2 பெண்கள் உட்பட 3 பேர்களின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இது குறித்து ஒடிசா டிஜிபி ஒய்.பி.குரானியா,‘‘ நேற்றுமுன்தினம் இரவு 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். நேற்று 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நக்சலைட் மத்திய கமிட்டி உறுப்பினர் என்கவுன்டரில் கொல்லப்பட்டது ஒடிசா போலீசாரின் மிக பெரிய சாதனை. ஒடிசாவில் நக்சலைட்டுகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு விட்டது’’ என்றார்.

* நக்சலிசம் ஒழிக்கப்படும்: அமித் ஷா
இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், இது நக்சல் இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கான பயணத்தில் ஒரு மைல்கல். 2026 மார்ச்சுக்குள் நாட்டில் நக்சலிசத்தை முழுமையாக ஒழிக்க அரசு உறுதியுடன் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Naxalite ,Odisha ,Bhubaneswar ,Naxalites ,Ganjam ,Kandhamal ,Kandhamal district ,
× RELATED மைசூரு அரண்மனை அருகே சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி