×

சிவகாசி மாநகராட்சியில் சுகாதார வளாகம் இடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சிவகாசி, மே 14: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் செங்குளம் கண்மாய் கரையில், நம்ம டாய்லெட் திட்டத்தில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம், நீர்நிலை பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி, இடித்து அப்புறப்படுத்த தாசில்தார் உத்தரவிட்டிருந்தார். இது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு அனுமதி கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று 25க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சுகாதார வளாகம் இடிக்கும் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டதாக மேயர் சங்கீதா இன்பம் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென ஜேசிபி வாகனம் மூலம் சுகாதார வளாகத்தை இடிக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒருபுறம் இடிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்த திமுக கவுன்சிலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடுத்தததால், பணிகள் நிறுத்தப்பட்டன.

அதனை தொடர்ந்து நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திருத்தங்கல்- வில்லிபுத்தூர் சாலையில் போலீஸ் ஸ்டேசன் அருகில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து திருத்தங்கல் போலீசார் மற்றும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் மற்றும் திமுக நிர்வாகிகள் பொன்சக்திவேல், ராமமூர்த்தி, அ.செல்வம், காளிராஜன், முத்தலிப், கவுன்சிலர்கள் வெயில்ராஜ், நிகா, சாமுவேல் மற்றும் திமுகவினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இடிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்று இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகே சுகாதார வளாகம் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post சிவகாசி மாநகராட்சியில் சுகாதார வளாகம் இடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi Corporation ,Sivakasi ,Tahsildar ,Namma Toilet ,Kanmai River ,Thiruthangal, Chengulam ,Dinakaran ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்