திருவண்ணாமலை, மே 13: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நினைக்க முத்தித்தரும் திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா கடந்த இரண்டு நாட்களாக வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 8.47 மணிக்கு தொடங்கி, நேற்று இரவு 10.43 மணிக்கு நிறைவடைந்தது.
அதையொட்டி, நேற்று முன்தினம் காலை தொடங்கி, தொடர்ந்து இரண்டு நாட்களாக சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். இந்நிலையில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 10.43 மணி வரை அமைந்திருந்ததால், இரண்டாம் நாளான நேற்றும் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர். அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் நேற்றும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது. இதுவரை எப்போதும் இல்லாத அளவில், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு கிரிவல பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. குறிப்பாக, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநில பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருந்தது. கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலையில் காணும் திசையெங்கும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலையில் இருந்தே தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொது தரிசன வரிசையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கும் நிலை காணப்பட்டது. கிரிவலம் முடித்த சோர்வையும் பொருட்படுத்தாமல், கடும் வெயிலிலும் சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருந்தது வியப்பை ஏற்படுத்தியது. தரிசன வரிசையில் காத்திருந்த பக்தரகளுக்கு நேற்றும் குடிநீர், மோர் ஆகியவை வழங்கப்பட்டன. தரிசன வரிசையில் காத்திருந்த சில பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். உடனடியாக, அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
காந்திசிலை சந்திப்பு பகுதியில் கிரிவலம் சென்ற பக்தர் நெஞ்சு வலியால் துடிதுடித்தார். உடனடியாக, அவரை அங்கிருந்தவர்கள் மீது 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரிவல பக்தர்களின் வசதிக்காக, தொடர்ந்த நேற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 20 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட்டன. போலீஸ் பாதுகாப்பும் நேற்றும் நீட்டிக்கப்பட்டது. கிரிவலப்பாைதயின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும், உடனுக்குடன் தூய்மைப்பணியை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சித்ரா பவுர்ணமி முடிந்த பிறகும் பக்தர்களின் வருகை தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, அண்ணாாமலையார் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
The post லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் * கோயிலில் தொடர்ந்து கூட்டம் அலைமோதியது * 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2வது நாளாக appeared first on Dinakaran.
