×

மானிய தொகை வந்ததாக மூதாட்டியிடம் நகை, பணம் மோசடி பண்ருட்டியை சேர்ந்தவர் கைது செய்யாறு அருகே முதிேயார் பென்ஷன்

செய்யாறு, டிச.20: செய்யாறு அருகே முதியோர் பென்ஷன் மானிய தொகை வந்துள்ளதாக கூறி மூதாட்டியிடம் நகை, பணம் அபேஸ் செய்த பண்ருட்டியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா வடஇலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி லட்சுமி (70). இவர் கடந்த மாதம் 10ம் தேதி தனது வீட்டின் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 48 வயது மதிக்கத்தக்க நபர், ‘உங்களுக்கு முதியோர் பென்ஷன் மானிய தொகை வந்துள்ளது. விவரங்களை சரிபார்க்க வேண்டும். ரேஷன் கார்டை கொடுங்கள்’ என்று கூறினார். இதனை நம்பிய லட்சுமி, ரேஷன் கார்டை, அந்த நபரிடம் கொடுத்தார்.

அதனை பார்த்துவிட்டு விவரங்கள் சரியாக உள்ளதாக கூறிய அந்த மர்மநபர், ‘மானியம் வந்ததற்காக ரூ.5 ஆயிரம் அரசுக்கு கட்ட வேண்டும்’ எனக்கூறி பணத்தை கேட்டார். இதனால் லட்சுமி, தான் சேமித்து வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை அந்த நபரிடம் கொடுத்தார். ஆனால் அந்த நபர், மீதி பணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், இல்லாவிட்டால் காதில் உள்ள கம்மலை கழற்றி கொடுங்கள், அடகு வைத்து பணம் பெறலாம்’ எனக்கூறியுள்ளார். இதனால் லட்சுமி, தங்க கம்மலை கழற்றிக்கொடுத்தார். அதனை வாங்கிக்கொண்ட அந்த மர்ம நபர், மறுநாள் ரேஷன் கடையில் வந்து மானிய தொகையும், நகை ரசீதும் வாங்கிக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனால் லட்சுமி மறுநாள், ரேஷன் கடைக்கு சென்று கேட்டார். அதற்கு அந்த கடைக்காரர், ரேஷன் கடையில் எதுவும் மானியம் தரமாட்டார்கள்’ என்று கூறினார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அதிர்ச்சி அடைந்த லட்சுமி, தனது மகனிடம் கூறி அழுதார்.

இதுகுறித்து லட்சுமி பிரம்மதேசம் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் பறித்துச்சென்ற மர்மஆசாமியை தேடினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, மூதாட்டியை ஏமாற்றிய மர்ம ஆசாமி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவாமூர் கிராமத்தை சேர்ந்த முருகன்(48) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று செய்யாறில் சுற்றித்திரிந்த முருகனை போலீசார் கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Tags : Panruti ,Cheyyar ,Vembakkam taluka ,Vadailuppai ,Cheyyar, Tiruvannamalai district… ,
× RELATED மகளை கடத்தி கள்ளக்காதலனுக்கு...