செய்யாறு, டிச.23: செய்யாறு அருகே முன்விரோத தகராறில் மாமியார், மருமகளை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், பாய் வியாபாரி. இவரது மனைவி அஞ்சலா(33). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவரது குடும்பத்திற்கும், எதிர்வீட்டை சேர்ந்த ஏழுமலை(60) குடும்பத்திற்கும் கடந்த சில ஆண்டுகளாக வீட்டின் அருகே மழைநீர், கழிவு நீர் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அஞ்சலா, அவ்வழியாக வந்த டேங்க் ஆபரேட்டரிடம்‘ ஏன் 20 நாட்களாக குழாய் தண்ணீர் விடவில்லை’ எனக்கேட்டுள்ளார்.
இதையறிந்து அங்கு வந்த ஏழுமலை மனைவி அம்பிகா, ‘என்னை காரணமாக வைத்துதான் ஆபரேட்டரிடம் தகராறு செய்கிறாய்’ எனக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஏழுமலை, அவரது மகன்கள் வெங்கடேசன்(32), சிலம்பரசன் உள்பட 4 பேரும் சேர்ந்து, அஞ்சலாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். தடுக்க வந்த அஞ்சலாவின் மாமியாரையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அஞ்சலா, செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அனக்காவூர் போலீசில் அஞ்சலா புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை, அவரது மகன் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் நேற்று காலை கைது செய்து விசாரித்து வருகிறார். தலைமறைவாக உள்ள அம்பிகா, சிலம்பரசன் ஆகியோரை தேடி வருகிறார்.
