- மாவட்ட கல்வி அலுவலர்
- பெரணமல்லூர் டவுன் பஞ்சாயத்து
- பெரணமல்லூர்
- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை
- பெரணமல்லூர் மாவட்டம்…
பெரணமல்லூர், டிச.23: பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை வட்டார கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வரும் 31ம் தேதி பெரணமல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) செண்பகவல்லி தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் அப்பாஸ் அலி வரவேற்றார். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் சத்யராஜ் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இந்த ஊர்வலமானது பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது வருகிற 31ம் தேதி நடைபெற உள்ள 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் அடையாள அட்டை புதுப்பித்தல், தேசிய அடையாள அட்டை, தனித்து அடையாள அட்டை வழங்குதல், ரயில் பயண சலுகை அட்டை, முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு குறித்த சேவைகள் மருத்துவ முகாமில் வழங்கப்படுகிறது. இந்த முகாமினை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஊர்வலத்தில் சிறப்பு ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
