×

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது வெளிபிரகாரம் வரை வரிசை நீண்டது வார இறுதிநாளான நேற்று

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வார இறுதி விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், கோயில் வெளி பிரகாரம் வரை ஒரு கிமீ தூரத்துக்கு தரிசன வரிசை நீண்டிருந்தது. திருவண்ணாமலையில் பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 3ம் தேதி நடந்து முடிந்தது. தீபத்திருவிழா நிறைவடைந்த பிறகும், திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை. அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் திரண்டு வருகின்றனர்.

குறிப்பாக, வார இறுதி விடுமுறை தினமான ேநற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்தது. வெளி மாவட்டங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர். அதேபோல், மேல்மருவத்தூர் செவ்வாடை பக்தர்கள், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகையும் அதிகரித்தது. அதனால், அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கும் போதே தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். காலை 10 மணிக்கு பிறகு பக்தர்கள் வருகை அதிகரித்தது. அதனால், கோயில் வெளிபிரகாரம் வரை தரிசன வரிசை சுமார் 1 கிமீ தூரம் நீண்டிருந்தது.

அதனால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பிறகே தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. பொது தரிசன வரிசை ராஜகோபுரம் வழியாகவும், ரூ.50 கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டது. கட்டண தரிசன வரிசையும் வட ஒத்தைவாடை தெருவில் நீண்டிருந்தது.

அதனால், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க முடியாமல் தவித்தனர். ஆனாலும், அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வது வியப்பை ஏற்படுத்தியது. மேலும், பக்தர்கள் வருகை அதிகரித்ததால், கார், வேன் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் அண்ணா நுழைவு வாயில், காந்திநகர் திறந்தவெளி திடல் மற்றும் தாலுகா அலுவலக வாளாகம் உளளிட்ட பகுதிகளில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், வரும் 25ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது. எனவே, புத்தாண்டு வரை திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருக்கும் வாய்ப்பு உளளது. எனவே, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக விரிவான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Karthigai Deepathi festival ,
× RELATED ஊர்நாட்டாண்மை கொலை தலைமறைவான 2 பேர்...