சென்னை: மதுரையில் பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ‘பிரதமரைத்தான் பாராட்டணும், ராணுவ வீரர்கள் என்ன போர்ல சண்டையா போட்டாங்க’ என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் சார்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. செல்லூர் ராஜூ தனது பேச்சை திரும்ப பெற்று, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனுவையும் அளித்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முன்னாள் ராணுவத்தினர் முன்னேற்ற நலச் சங்கம் சார்பில் செல்லூர் ராஜூவை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் படை வீரர் சங்க மாநில பொதுச்செயலாளர் மேஜர் சுகுமார் கூறுகையில், ‘‘ராணுவ வீரர்களை இழிவாக பேசிய அவரை, எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அவருக்கு தேர்தலில் நிற்க சீட் கொடுக்ககூடாது. அவர் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.
The post செல்லூர் ராஜூவை கண்டித்து முன்னாள் ராணுவத்தினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
