×

காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி குழந்தையுடன் இளம்பெண் மறியல்: தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சை: பேராவூரணி அருகே காதலனுடன் சேர்த்து வைக்க கோரி குழந்தையுடன் இளம்பெண் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள வலச்சேரிக்காட்டை சேர்ந்தவர் நாகலிங்கம். தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவரது மகன் பிரகாஷ்(24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் மகள் ஹரிபிரியாவிற்கும்(21) காதல் ஏற்பட்டது. பெற்றோரை இழந்த ஹரிப்பிரியா உறவினர் ஆதரவில் வாழ்ந்து வந்தார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் நெருங்கி பழகிய நிலையில் ஹரிபிரியா கர்ப்பமானார். இந்நிலையில் அவரை திருமணம் செய்ய, பிரகாஷ் மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிபிரியா கடந்த 2023ம் ஆண்டு பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஹரிபிரியா கர்ப்பத்துக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என பிரகாஷ் வாக்குவாதம் செய்தார். இந்நிலையில் ஹரிபிரியாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பரிசோதனை முடிவில் ஹரிபிரியாவின் கர்ப்பத்திற்கு பிரகாஷ்தான் காரணம் என்பது நிரூபணம் ஆனது.

அதனைத் தொடர்ந்து பிரகாஷ் மீது நீதிமன்ற நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டதால் பிரகாஷ் தலைமறைவாகி விட்டார். ஹரிபிரியா காதலனுடன் சேர்த்து வைக்க கோரி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மீண்டும் நாடினார். மகளிர் போலீசார் திருச்சிற்றம்பலம் போலீசாரின் உதவியுடன் பிரகாஷின் பெற்றோரை அழைத்து பேசினர். அப்போது பிரகாஷ் இருக்கும் இடம் தெரியாது என்றும், உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் எனவும் அவரது பெற்றோர் கூறினர்.

இந்நிலையில், பிரகாஷின் சகோதரிக்கு திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வர் கோயிலில் நேற்று மாலை திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் பிரகாஷ் கலந்து கொண்டார். நிச்சயதார்த்தவிழா முடிந்தவுடன், திருச்சிற்றம்பலத்தில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு விழாவிற்கு வந்தவர்கள் உணவருந்த சென்றனர். இதுதெரிந்த ஹரிபிரியா, கைக்குழந்தையுடன் அந்த உணவு விடுதிக்கு அருகே நின்று கொண்டிருந்த பிரகாஷிடம், தனக்கும் தனது குழந்தைக்கும் நியாயம் கேட்டு கதறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷின் உறவினர்கள் ஹரிபிரியாவை தாக்கினர்.

இதனால் ஹரிப்பிரியா ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த திருச்சிற்றம்பலம் போலீசார் பெண்ணை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட ஹரிபிரியா, காதலன் பிரகாஷ், அவரது பெற்றோரை திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹரிப்பிரியாவின் பிரச்னை நீதிமன்ற நடவடிக்கையில் இருப்பதால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என்பதை ஹரிபிரியாவிற்கு புரிய வைத்த போலீசார் சமாதானப்படுத்தி, பிரகாஷின் நடவடிக்கைகளை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி குழந்தையுடன் இளம்பெண் மறியல்: தஞ்சை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Peravoorani ,Nagalingam ,Valacherikattu ,Tiruchitrambalam ,Prakash ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...