×

குன்னூர் அருகே பரபரப்பு பழங்குடியின பெண் உடலை அடக்கம் செய்ய எஸ்டேட் நிர்வாகம் மறுப்பு

*தாசில்தார் பேச்சு வார்த்தை

குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பழனியப்பா எஸ்டேட். இந்த எஸ்டேட்டிற்கு அடுத்து ஊஞ்சலார் கொம்பை பழங்குடியினர் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பிரேமா (45) என்ற பெண் கடந்த 20 ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இதனிடையே அப்பகுதி மக்கள் கடந்த 2022 ம் ஆண்டு வரை அருகில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது அந்த மயானத்தில் உள்ள இடம் எஸ்டேட்டிற்கு சொந்தமான இடம் எனக்கூறி, இனிமேல் உடல் அடக்கம் செய்யக்கூடாது என்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்யுமாறு எஸ்டேட் நிறுவனம் தெரிவித்தனர்.இதையடுத்து, உயிரிழந்த அந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்தனர்.

குறிப்பாக முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் மாட்டுப்பெட்டி என்னும் பகுதி. தற்போது அந்த பகுதிக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு உள்ளதால், சடலத்தை அவ்வளவு தூரம் கொண்டு செல்ல இயலாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால் சம்பவ இடத்திற்கு வந்த கொலக்கொம்பை காவல்துறையினர், குன்னூர் வட்டாட்சியர் ஜவகர், வருவாய்த்துறை ஆய்வாளர் சோபனா உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நேற்று இரவு 9 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். எவ்வித சுமூகமான தீர்வு ஏற்படவில்லை.

இருப்பினும் உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு போக்சோ வழக்கில் கைதான நிலையில் அவர், இன்று பரோலில் வெளிவந்த பின்பு தான் உடலை எந்த இடத்தில் அடக்கம் செய்யலாம் என்பது குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post குன்னூர் அருகே பரபரப்பு பழங்குடியின பெண் உடலை அடக்கம் செய்ய எஸ்டேட் நிர்வாகம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Tahsildar ,Palaniappa Estate ,Nilgiris district ,Oonjalar Kombai ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...