×

நடிகர் சிவாஜி வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து


சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜகஜால கில்லாடி என்ற பெயரில் பட தயாரிப்பதற்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 3 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். வட்டியுடன் சேர்த்து ரூ. 9 கோடி கடன் தொகையை திருப்பித் தரக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு மத்தியஸ்தம் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மத்தியஸ்தர், ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்க துஷ்யந்த் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

ஆனால் வீடு தனக்கு சொந்தமானது என்றும், தனது தந்தை சிவாஜி கணேசன் தனது பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளதால் இந்த வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் பிரபு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்றும் அதனால்  அவரது வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார். மேலும் ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறித்து வில்லங்கப் பதிவில் திருத்தம் செய்யும்படி பதிவுத்துறைக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டிருக்கிறார்.

The post நடிகர் சிவாஜி வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து appeared first on Dinakaran.

Tags : Sivaji ,Chennai ,Madras High Court ,Sivaji Ganesan ,Dushyant ,Dhanapakiyam Enterprises ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...