- Senchi
- கோனை கிராமம்
- டாக்டர்
- சுதாகர்
- தமிழ்த்துறை
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- செஞ்சி, வில்லுப்புரம் மாவட்டம்
- கார்த்தி
செஞ்சி : செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களின் ஈமச் சின்னமான கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சுதாகர் தனது மாணவர்கள் கார்த்தி, கமலேஷ் ஆகிய மாணவர்களுடன் அப்பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டார். அப்போது செஞ்சி அடுத்த கோணை கிராமத்தில் பழமைவாய்ந்த சில ஈமச்சின்ன கல்வட்டங்களை கண்டுபிடித்தனர்.
நவீனமான இக்காலத்தில் ஒருவர் இயற்கை எய்தினால் எரிக்கிறோம் அல்லது புதைக்கிறோம். சிலர் சமாதியும் கட்டுகிறோம். சில மலைவாழ் மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் மட்டுமே புதைக்கிறார்கள்.
ஆனால் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் தங்களது தலைவர்கள் அல்லது முக்கியமானவர்களை புதைத்த இடத்தில் குத்துக்கல், கல்வட்டம், கல்பதுக்கை, கல்திட்டை, முதுமக்கள் தாழி, கற்குவை, நெடுங்கல் போன்ற அடையாளங்களோடு அடக்கம் செய்தனர். இதற்கான கல்வட்டம்தான் ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னமாக விளங்கியது.
இறந்தவர்களின் உடல் பகுதிகளை வைத்து அல்லது அவர்களின் நினைவாக எடுக்கப்படும் ஈமச்சின்னங்களின் மேற்பரப்பில். கற்பாறைகளை கொண்டு ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது.
இது தரையின் மேற்பரப்பில் காணப்படுவதோடு, ஈமச்சின்னங்களை பாதுகாக்கும், அடையாளப்படுத்தும் அமைப்பாகவும் திகழ்ந்தது. இது அமைவதனால் பிற்காலத்தில் இறந்தவர்களை புதைப்பவர்கள், அவ்விடத்தில் குழி தோண்டுவதில்லை.
பெருங்கற்கால கல்வட்டங்களின் புதைந்த பகுதியில் தாழிகள், குழிகள், கற்பதுக்கைகள் போன்றவை காணப்படும். கற்திட்டையை சுற்றிலும் இத்தகைய கல்வட்டங்கள் காணப்படுகின்றன. மலைப்பகுதியில், பாறையின் மேற்பரப்பில் இத்தகைய கல்வட்டங்கள், கற்திட்டைகள் வீழாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கின்றன. சில இடங்களில், கரடுமுரடான கற்களால் கல்வட்டங்கள் செய்யப்படுகின்றன.
கல்வட்டம், செங்குளம் இவற்றின் உள்ளே சிறுசிறு கற்கள் இட்டு நிரப்பப்படுகின்றன. சில இடங்களில் கற்பலகைகள் வட்டமாக புதைக்கப்படுகின்றன. இவ்வாறு அமைந்த கல்வட்டங்கள் பெரும்பாலும் மலை அருகே இத்தகைய ஈமச்சின்னங்களை பார்க்க முடியும்.
கோணை கிராம மலைப்பகுதியில் இது அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கல்வட்டங்கள் விவசாயத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது 8 கல்வட்டங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், இக்கல்வட்டத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் ஒரு மனித உருவம் கொண்ட பாறை கீரல் ஓவியம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இதுபோன்ற கல் வட்டங்களையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்திய தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சுதாகர் வரலாற்று சிறப்புமிக்க நடுகல், ஓவியம், கொற்றவை சிலை, கல்வெட்டுகள் போன்ற பழங்காலத்து சின்னங்கள் கோணை கிராமத்தில் அமைந்துள்ளதால் அங்கும் அகழ்வராய்வுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.
The post செஞ்சி அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமச்சின்ன கல்வட்டம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.
